இந்தியாவிற்குள் சுற்றிப்பார்க்க அனுமதி பெற வேண்டிய இடங்கள் பற்றி தெரியுமா?
அருணாச்சல பிரதேசம்: இட்டாநகர், ரோயிங், தவாங், போம்டிலா, பாசிகாட், பாலுக்போங், ஜிரோ மற்றும் அனினி ஆகியவை 'இன்னர் லைன் பெர்மிட்' கேட்கும் அருணாச்சல பிரதேச மாநில சுற்றுலாத் தலங்களாகும்.
இந்த இடங்கள் பூடான், மியான்மர், சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்திருக்கின்றன. அதனால் பாதுகாப்பு விஷயத்தில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன.
லட்சத்தீவு: உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் லட்சத்தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இந்தியர்கள் செல்வதற்கு பாஸ்போர்ட் தேவை இல்லை என்றாலும், உரிய அனுமதி பெறுவது அவசியம்.
அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டினராக இருந்தால், செல்லுபடியாகும் பாஸ்போர்ட், விசா வைத்திருக்க வேண்டும்.
மிசோரம்: வங்கதேசம் மற்றும் மியான்மர் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிசோரமுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி பெற வேண்டும்.
நாகலாந்து: பசுமை மிளிரும் அழகிய பிரதேசங்களுள் ஒன்றாக விளங்கும் நாகலாந்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இருப்பினும் சில இடங்களுக்குச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
கோஹிமா, வோகா, மொகோக்சுங், திமாபூர், கிபிர், மோன் போன்ற இடங்களுக்குச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
லடாக்: காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கும் இங்கும் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட முடியாது. சில இடங்களுக்குச் செல்ல 'இன்னர் லைன் பெர்மிட்' வைத்திருக்க வேண்டும்.
நுப்ரா பள்ளத்தாக்கு, கர்துங் லா பாஸ், த்சோ மோரி ஏரி, பாங்காங் த்சோ ஏரி, தா, ஹனு கிராமம், நியோமா, துர்டுக், திகர் லா, தங்கியார் போன்ற இடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்.