கடல் கடந்து வந்து வேடந்தாங்கலில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளின் புகைப்படங்கள்!
உலக நாடுகளில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மனிதர்களுக்கு மட்டும்தான் விசா கட்டாயம். பரந்து.. விரிந்த.. இந்த உலகில் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவை இனங்களுக்கு இது பொருந்தாது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கணியன் பூங்குன்றனார் பாடியிருந்தாலும், அது பறவை இனங்களுக்கே சாலப்பொருந்தும். அந்த வகையில், உலக நாடுகளில் உள்ள சீதோஷ்ண நிலையை பொருத்து பறவை இனங்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
கடும் குளிரும், அதிக வெப்பமும் பறவை இனங்களுக்கு எப்போதுமே ஆகாது. இதுபோன்ற சூழ்நிலையில் அங்குள்ள பறவைகள் அதிகம் விரும்புவது இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளைத்தான்.
குறிப்பாக, தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு பறவைகள் கடல் கடந்து வரத் தொடங்கும். இந்த பறவைகளை வரவேற்பதற்காக 15-க்கும் மேற்பட்ட சரணாலயங்கள் இங்கு உள்ளன.
குறிப்பாக, பழமையான மற்றும் மிகப்பெரிய சரணாலயங்களில் ஒன்றான வேடந்தாங்கலுக்கு ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், உள்நாட்டில் பிற மாநிலங்களில் இருந்தும் 23 வகையான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரத்தொடங்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டும் நிறைய பறவைகள் வந்துள்ளன. வனத்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, தற்போதைய நிலையில் வேடந்தாங்கலில் 20 ஆயிரம் பறவைகள் தஞ்சம் அடைந்துள்ளன.
இந்த பறவைகள் அங்குள்ள ஏரியில் இருக்கும் நீர்க்கடப்பை மரங்களில் கூடுகளை கட்டி, முட்டையிட்டு அடைகாத்து வருகின்றன. 'முன்கூட்டியே வந்த பறவைகள் அடைகாக்கும் காலத்தை நிறைவு செய்துள்ளதால், முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து புதிய உலகத்தை கண்டு ரசிக்கின்றன.
"பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்" என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, வர்ண நாரை, பாம்புத்தாரா, நத்தை கொத்திநாரை, மிளிர்உடல் அரிவாள் மூக்கன், கூழைக்கடா, சாம்பல் நாரை என வகை வகையான பறவைகள் ஒரே இடத்தில் சங்கமித்துள்ளன.
இதைக் காண வரும் சுற்றுலா பயணிகள், பறவைகள் ஆர்வலர்கள், பறவைகளின் விதவிதமான ஒலிகள், குட்டி விமானங்கள் பறந்து வருவதுபோன்ற பறவைகளின் வருகை காட்சிகளை கண்டு மெய்சிலிர்த்து போகின்றன.
சுற்றுலா பயணிகளுக்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். பிப்ரவரி மாதம் வரை இங்கு தங்கும் பறவைகள், அதன்பிறகு பறக்க கற்றுக்கொண்ட குஞ்சுகளுடன் புதிய குடும்பமாய் சொந்த நாடுகளை நோக்கி பறக்க தொடங்கிவிடும்.