உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்!
பருப்பு வகைகள்: பாக்கெட்டில் இருந்து நேரடியாக பாத்திரங்களில் கொட்டாமல், சிறிது நேரம் வெயிலில் உலர வைக்கலாம்.
அரிசி: அரிசியைக் கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்தில், பிரியாணி இலை மற்றும் வசம்பை இடையிடையே போட்டு வைத்தால் பல மாதங்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
மாவு வகைகள்: அரிசி, மைதா, கோதுமை உள்ளிட்ட மாவு வகைகளை ஈரமில்லாத, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும். இதில், காய்ந்த மிளகாய், பிரியாணி இலைகளைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராமல் தவிர்க்கலாம்.
ரவை: ரவையை வறுத்து, ஆறவைத்த பின்பு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். அதில் பிரியாணி இலைகள் போட்டு, காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும்.
சர்க்கரை: சர்க்கரை டப்பாவில் எளிதில் எறும்புகள் வந்துவிடும். மேலும் காற்று புகுந்தால் சர்க்கரை நீர்த்து விடும். இதைத் தவிர்ப்பதற்கு இரண்டு, மூன்று கிராம்பு மற்றும் ஒரு துண்டு லவங்கப் பட்டையைப் போட்டு வைக்கலாம்.
வெங்காயம்: சின்ன வெங்காயத்தை வெயிலில் சிறிது நேரம் உலர்த்தி எடுத்து வைத்தால், ஒரு மாதம் வரை கெடாமலும், முளை வராமலும் இருக்கும்.
தேங்காய்: உடைத்த தேங்காயில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
கடல் உணவுப் பொருட்கள், இறைச்சி, பழங்கள், காய்கறிகளை பிரிட்ஜினுள் வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.