காய்கறி வாங்கும்போது எப்படி பார்த்து தேர்வு செய்வது!!
கேரட் இப்போதே பச்சையாக கடித்துவிடலாமா? என்று தோன்றும் விதத்தில் பளிச்சென்ற நிறத்துடன் மீடியமான சைசில் இருக்கவேண்டும்.
தேங்காயை கையில் எடுத்து குலுக்கிப்பாருங்கள். உள்ளே தண்ணீர் இருக்கவேண்டும். தேங்காயின் கண்கள் இருக்கும் பகுதியை லேசாக அழுத்திப்பாருங்கள். அமுங்காமல் இருந்தால் நல்ல தேங்காய்.
முட்டைக்கோஸ் கெட்டியாக, பளிச்சென்று புதிதாக இருக்கவேண்டும்.
உருளைக்கிழங்கு பழையது என்றால் அமுங்கும். புதியது கெட்டியாக இருக்கும். அமுக்கிப்பார்த்து வாங்குங்கள்.
பீன்ஸ், அவரையை கையில் எடுத்து பார்த்தாலே நாரை எளிதாக உரித்தெடுக்க முடியுமா என்பது தெரிந்துவிடும். எளிதாக உரிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.
சேனைக்கிழங்கு அதிக சிவப்பாக இல்லாமல் மஞ்சள் நிறம் கலந்திருப்பதை பார்த்துவாங்குங்கள். அதிக சிவப்பை குழந்தைகள் சாப்பிட்டால் நாக்கு அரிப்பதாக சொல்வார்கள்.
வெங்காயம் சிவப்பு நிறத்தில் இருப்பது நல்லது. வாடலாக, அழுகலாக இருந்தால் நிறம் மாறும். பொதுவாக கருநீலநிறத்தில் இருப்பது அழுகலின் அடையாளம்.
முருங்கைக்காய் பச்சை நிறமாக இருக்கவேண்டும். அதிக கனமாகவும், கெட்டியாகவும் இருக்கக்கூடாது. வளையவேண்டும். முற்றிய முருங்கைக்காயை வளைத்தால் முறிந்துவிடும்.
புடலையில் நார் இருக்கக்கூடாது. எளிதாக உடையும் விதத்தில் இருந்தால் நல்லது.