சாட்சியங்களை மாற்றி வழக்கை திசைதிருப்பிய போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீது கிரிமினல் வழக்கு உதவி கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு பரிந்துரை

சாட்சியங்களை மாற்றி வழக்கை திசைதிருப்பிய போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீது கிரிமினல் வழக்கு உதவி கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு பரிந்துரை

கொலை வழக்கில் சாட்சியங்களை மாற்றி வழக்கை திசை திருப்பியதாக போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவும், சரியாக விசாரணை நடத்தாத உதவி கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் பரதராமியை அடுத்த கே.வலசை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35) ராணுவவீரர். இவருக்கும் பொய்கை ராமாபுரத்தை சேர்ந்த செல்வி என்பவருடைய மகள் ரஞ்சனிக்கும் 8.11.2010 அன்று திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கிரீஷ் (5), தனுஸ்ரீ (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெருமாள் தனது மனைவி ரஞ்சனியிடம் ரூ.10 லட்சம் வரதட்சணையாக கேட்டு அவரை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் ரஞ்சனி பெயரில் உள்ள சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறும் வற்புறுத்தி உள்ளார். இதனால் ரஞ்சனியின் தாய் செல்வி ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனாலும் பெருமாள் தொடர்ந்து ரஞ்சனியை கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் 10.7.2017 அன்று ரஞ்சனி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்போதைய பரதராமி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்பாபு மற்றும் போலீசார் சென்று ரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பெருமாள் வீட்டில் கிடந்த வெள்ளைநிற கயிறு ஒன்றை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் ரஞ்சனி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து ராணுவீரர் பெருமாளை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இன்ஸ்பெக்டர் பிரகாஷ்பாபு, பெருமாள் வீட்டில் கைப்பற்றிய கயிறு, ரஞ்சனியின் கழுத்தை நெரிக்க பயன்படுத்தியதற்கான சாட்சியம் என்பது தெரிந்தும் அதை மறைத்து ஒரு வருடத்திற்கு பிறகு வேறு ஒரு கயிற்றை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோன்று வரதட்சணை காரணமாக இந்த சம்பவம் நடந்ததால் அப்போதைய உதவி கலெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தினார். அவரும் வரதட்சணை காரணமாக இந்த சம்பவம் நடக்காதது போன்று பெருமாளுக்கு சாதகமாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் பிரகாஷ்பாபு தற்போது பதவி உயர்வு பெற்று திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகிறார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய சாட்சியங்களை மாற்றியதால் பெருமாள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவரை விடுதலை செய்து நீதிபதி எஸ்.குணசேகரன் உத்தரவிட்டார்.

மேலும் சாட்சியங்களை மாற்றி வழக்கு விசாரணையை திசை திருப்பியதால் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், வழக்கை சரியாக விசாரிக்காமல் அறிக்கை தாக்கல் செய்த உதவி கலெக்டர் செல்வராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி குணசேகரன் பரிந்துரை செய்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com