குளத்தில் வீசப்பட்ட ஐம்பொன் சாமி சிலை கண்டெடுப்பு போலீசார் விசாரணை

முத்துப்பேட்டை அருகே குளத்தில் வீசப்பட்ட ஐம்பொன் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் வீசப்பட்ட ஐம்பொன் சாமி சிலை கண்டெடுப்பு போலீசார் விசாரணை
Published on

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் வடக்கு செருமனையூரில் நிலங்கள் மற்றும் குளம், தோப்பு ஆகியவை உள்ளது. சாகுல்அமீது நேற்று குளத்தின் கரையில் உள்ள தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை பறிப்பதற்காக தொழிலாளி முத்துவேல் என்பவரை அழைத்து சென்றார்.

பின்னர் தேங்காய்களை பறித்து விட்டு முத்துவேல் அங்குள்ள குளத்திற்கு கை, கால்களை கழுவ சென்றார். குளத்தில் சிறிதளவே தண்ணீர் தேங்கி இருந்தது. அப்போது தண்ணீரில் அவரது காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அதனை இழுத்து பார்த்த போது அது சாக்குமூட்டை என்பது தெரியவந்தது.

பின்னர் அந்த சாக்குமூட்டையை கரைக்கு கொண்டு வந்து அதனை சாகுல் அமீதும், முத்துவேலும் பிரித்து பார்த்தனர். அப்போது அதற்குள் 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன சாமி சிலை இருப்பது தெரிய வந்தது.

அந்த சிலை நடராஜர் சிலைபோல் இருந்தது. மேலும் சிலையின் இடது பக்கம் கை மற்றும் கால் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சாகுல் அமீது திருத்துறைப்பூண்டி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் தங்கதுரை, முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த சிலையை யாராவது சாக்கில் கட்டி கொண்டு வந்து குளத்தில் வீசி சென்றனரா? அல்லது கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சிலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் ஐம்பொன் சாமி சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com