

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 984 முகாம்களில் 1.47 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம
தர்மபுரி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. இந்த முகாமை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட 1,53,919 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அது போலவே இந்த (2022) ஆண்டும் 27-2-2022 அன்று நடைபெறவுள்ள முகாமில் 1,47,595 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
நடமாடும் மருத்துவக்குழுக்கள்
இந்த பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 4,080-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பெருமளவில் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள், சினிமா அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களில் சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட உள்ளன.
மேலும் நாடோடிகள், நரிக்குறவர்கள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 18 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 58 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழிவள்ளல், அரசு மருத்துவக்கல்லுரி முதல்வர் அமுதவள்ளி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.