

நயினார்கோவில்,
கூட்டுறவு கடன் சங்கத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோசடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் நயினார் கோவில் யூனியன் பி.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகள் வைத்து ரூ.1 கோடியே 47 லட்சம் மோசடி நடைபெற்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2 மாத காலமாக கடன் சங்கம் செயல்படாமல் உள்ளதால் விவசாயிகள் நெருக்கடிக்கு ஆளாகினர். இதையடுத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படாத நிலையில் உள்ளதை கண்டித்தும், இந்த கடன் சங்கத்தை சேர்ந்த அனைத்து கிராம விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டின் விவசாய கடன் மற்றும் உரம், நகைக்கடன் வழங்காததை கண்டித்தும், கிராமத்தில் கோவில் கட்ட வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பணம் எடுக்க முடியாதநிலையை கண்டித்தும் பி.கொடிக் குளம், தனியாப்புளி, சிறுவயல், அ.பனையூர், கிளியூர், தியாகவன்சேரி ஆகிய கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை
அப்போது சங்கம் சார்ந்த கிராம விவசாயிகளுக்கு அரசு வழங்கும் எந்த சலுகையும் கிடைக்கவில்லை. கடன் சங்கம் செயல்படாததால் வாழ்வாதாரத்துக்கு பணம் எடுக்க முடிய வில்லை. அடகு வைத்த நகைகளை மீட்க முடிய வில்லை. கடன் சங்கத்தின் பணத்தை மோசடி செய்தவர்கள் மோசடிக்கு துணை போனவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். முழுமையான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.