இதய பரிசோதனையை எளிமையாக்கும் கையடக்க இ.சி.ஜி. கருவி !!

இதய நோய் அதிக மக்கள் இறப்பிற்கு காரணமாக இருப்பதால், இத்தகைய தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் இந்த நவீன உலகில் மிகவும் முக்கியமானவை
இதய பரிசோதனையை எளிமையாக்கும் கையடக்க இ.சி.ஜி. கருவி !!
Published on

இந்தியாவில் அதிகளவு மரணத்தை விளைவிக்கும் நோய்களுள் ஒன்றாக இதய நோய் இருக்கிறது. இதயத் துடிப்பு சரியாக உள்ளதா? என்பதை கண்டறிய மருத்துவமனை அல்லது பரிசோதனை நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அங்குதான் இதயம் ஆரோக்கியமானதாக உள்ளதா? என்பதை அறிய முடியும்.

உங்கள் பாக்கெட்டிலேயே அடங்கக்கூடிய கார் சாவிக்கொத்து அளவுள்ள கையடக்க கருவி உண்டு என வைத்து கொள்ளுங்கள். அதன் மூலம் மருத்துவமனைகளில் நீங்கள் பார்க்கும் பெரிய ஈ.சி.ஜி கருவியின் முடிவுகளை, இந்த சிறிய கருவியின் மூலம் பெற முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இதை சொன்னவர்கள் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரான ராகுல் ரஸ்தோகி மற்றும் நேஹா ரஸ்தோகி ஆகியோர் தான்.

நேஹா ரஸ்தோகி - ராகுல் ரஸ்தோகி
நேஹா ரஸ்தோகி - ராகுல் ரஸ்தோகி

நொய்டாவை சேர்ந்த இவர்கள் செல்போன் மற்றும் மருத்துவக் கருவியை சேர்த்து ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மென்பொருளை வடிவமைத்து இதய பராமரிப்புக்கு ஏற்ற, ஒரு சிறிய அளவிலான, உலகின் முதல் தொடு திறன் அடிப்படையிலான கருவியை கண்டுபிடித்துள்ளனர். 2013-ம் ஆண்டில் ராகுலின் தந்தைக்கு ஏற்பட்ட இதய வலி, இதற்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருக்கிறது. அவரது தமனிகள் பாதிப்படைந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனால் எப்போதும் அவர் கண்காணிப்பு நிலையிலேயே இருக்க வேண்டும், அவரின் இதயத்துடிப்பை அடிக்கடி கவனிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் இதயத்துடிப்பை கண்காணிக்க அடிக்கடி மருத்துவமனை செல்ல முடியாத நிலையில் இருந்தார். அதனால் இந்த தம்பதியினர் எளிதாக வீட்டிலேயே இதய நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் எளிதான ஒரு கருவியை தேடினார்கள். ஆனால் இதயத்தின் 12-தரவுகளையும் தரக்கூடிய ஈ.சி.ஜி கருவியின் பற்றாக்குறை இந்திய சந்தையில் நிலவியது. ஒரு தரவுகளை தரக்கூடிய ஈ.சி.ஜி கருவி மட்டுமே சந்தையில் கிடைத்தது. மேலும் இந்தியாவில் தற்போதைய ஈ.சி.ஜி சாதனங்கள் விலை அதிகமாகவும் இருந்தன.

மேலும் இதய நோய்களை ஆரம்பநிலையிலேயே கண்டறிய, மக்களுக்கு எளிதாக வீட்டில் பயன்படுத்தும் ஈ.சி.ஜி கருவிகள் இல்லை என்ற நிலையே இருந்தன. எனவே இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக, தாங்களாவே முயன்று 12-தரவுகளையும் கண்டறியக்கூடிய ஈ.சி.ஜி கருவியை வடிவமைக்க முடிவு செய்தனர். அதனை கையடக்கமாக உருவாக்க வேண்டும் என்பதை சவாலாகவே எடுத்துக் கொண்டனர்.

நேஹாவின் ஆலோசனைப்படி செயல்பட்டு ராகுல், இந்த கருவிக்கு முதன்முதலில் முன்மாதிரி வடிவத்தை கொடுத்தார். பின்பு தாங்கள் தயாரிக்க போகும் கருவியை பற்றி ஆராயத்தொடங்கியவுடன், அவர்களுக்கு வழிகாட்ட, சில மருத்துவர்களின் உதவியும் கிடைத்தது. அவர்களின் துணையோடு இந்த ஈ.சி.ஜி கருவியை விரைவாக வடிவமைக்க முடிந்தது.

இந்த கருவியின் சிறப்பம்சம் என்னவென்றால், இதை எளிதாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இந்த ஈ.சி.ஜி. கருவி விலை குறைவாகும். மேலும் 12-வகையான தரவுகளை இதன் மூலம் துல்லியமாகவும், விரைவாகவும் பெறவும், இதயத்துடிப்பு தொடர்ந்து சீராக உள்ளதா? என்பதை கண்காணிக்கவும் முடியும். அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே 800-க்கும் அதிகமான கருவிகள் விற்று தீர்ந்தது.

கையடக்க இ.சி.ஜி. கருவி
கையடக்க இ.சி.ஜி. கருவி

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மற்ற ஈ.சி.ஜி. முறையை போல இதில் ஜெல்லின் பயன்பாடு இல்லை. மூன்று சென்சார்களை கொண்டு இயங்கக்கூடியது. இந்த கருவியில் உள்ள சென்சார்களை நமது மார்பில் மற்றும் கைகளில் மாறி, மாறி வைக்கும்போது இதன் மூலம் கிடைக்கும் வரை படத்தை ஆவணமாக நமது செல்போன்களில் காண முடியும். புளூடூத் வழியாக இணைக்கபட்ட இந்த கருவியில், நமது செல்போன்கள் மூலமாகவே தகவல்களை பெற முடியும். இந்த கருவியானது 2014-ம் ஆண்டில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு சில மாறுதல்கள் செய்யப்பட்டது. எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் சரிபார்க்கப்பட்டு, சான்றளிக்கப்பட்டு தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இது போன்ற எளிமையான இதயத்தை பரிசோதிக்கின்ற கருவியை தனிநபர்கள் மட்டுமல்லாமல் கிளினிக்குகள், தொலைதூர மருத்துவ முகாம்களுக்கும் எளிதாக கொண்டு சென்று பயன்படுத்தவும் முடியும் என்பது சிறப்பம்சம். நோயாளிகள் அமர்ந்த நிலையிலும் இந்த கருவியை இயக்க முடியும் என்பதால் இதயத்தை பரிசோதிப்பதற்கு பிரத்தியேகமாக ஒரு நபர் தேவையில்லை.

''இந்த கருவியானது சமூகத்தில் பின்தங்கிய மக்களின் இதய நோயை முன்கூட்டியே கண்டுப்பிடிப்பதன் மூலம் அவர்களின் நிதி சுமையை குறைக்கும். இதய நோய் அதிக மக்கள் இறப்பிற்கு காரணமாக இருப்பதால், இத்தகைய தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் இந்த நவீன உலகில் மிகவும் முக்கியமானவை. மருத்துவமனைக்குச் செல்ல இயலாதவர்களுக்கு மருத்துவ வசதியை எளிதாகக் கிடைக்கச் செய்யும் வகையில் வேறு சில கையடக்க சாதனங்களை கண்டு பிடிக்கும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்'' என்கிறார், ராகுல்.

நேஹா ரஸ்தோகி சமீபத்தில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com