கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண், குழந்தை வளர்ப்பு ஆலோசனைக்காக என்னை அணுகினார். அவர் மிகவும் வெகுளித்தனமான சுபாவம் கொண்டவர். அவருக்கு குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தற்போது அவர், அனைவரும் பாராட்டும் வகையில் அவரது குழந்தைகளை வளர்த்து வருகிறார். இன்றுவரை என்னுடன் தொடர்பில் இருக்கிறார்.
கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
Published on

"மகிழ்ச்சி ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. உங்களுடைய மகிழ்ச்சி மற்றவரை சார்ந்தது இல்லை. இதை பெண்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும்" என்கிறார் ஆனந்தி ரகுபதி.

சென்னையில் வசிக்கும் இவர், குழந்தை பிறப்பு பயிற்சியாளராகவும், மனநல ஆலோசகராகவும் பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். கர்ப்ப காலத்திற்கு தயார் ஆவது, குழந்தை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரது பேட்டி.

குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்து ஆலோசனை அளிக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி?

நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். உடல் உபாதைகள் காரணமாக, எனது கர்ப்ப காலத்தில் வருத்தமான மனநிலையில் இருந்தேன். அப்போது 'கர்ப்பகாலத்தில் கவலைப்படுவது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும்' என்று, எனது கல்லூரி பருவத்தில் ஒரு பேச்சாளர் பேசியது நினைவுக்கு வந்தது. அதை உணர்ந்து எனது மன நிலையையும், செயல்பாடுகளையும் மாற்றிக்கொண்டேன்.

குழந்தை பிறந்தவுடன் கணவரின் தொழில் முறைப் பயணமாக கலிபோர்னியா சென்றோம். அங்கு குழந்தைகளின் ஆரம்ப கால மூளை வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. அங்கேயே குழந்தை பிறப்பு பயிற்சியாளர் படிப்பை முடித்தேன். பின்பு இந்தியா திரும்பினேன்.

அந்தக் காலகட்டத்தில், இங்கு அந்த படிப்பு பற்றி பல மருத்துவர்களுக்கே விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அப்போது ஒரு மருத்துவர், நான் சொன்னதைப் புரிந்து கொண்டு, "என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்கள் அதிக அளவில் குழந்தை பிறப்பு குறித்து சந்தேகங்களை கேட்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் புரிய வையுங்கள்" என்று கூறினார். அப்போது முதல் நான் இப்பணியை செய்து வருகின்றேன்.

உங்களது செயல்பாடுகள் பற்றி கூறுங்கள்?

முதலில் குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்து மட்டுமே கற்று இருந்தேன். பின்பு இதைப் பற்றி மற்றவர்களிடம் பேசியபோது, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக கர்ப்ப காலம் மற்றும் கர்ப்பத்திற்கு முன்பும், பின்பும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து படித்து முடித்து ஆலோசனை வழங்கினேன்.

இது தொடர்பான எனது பயிற்சி மையத்தின் மூலம், கர்ப்பிணிகள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்க முடிந்தது. அவர்களின் மன மகிழ்ச்சிக்காக நாட்டியம் ஆடுதல், பாட்டு பாடுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தேன்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சியில் பேசினேன். அதன் மூலம் பலர் குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்த விளக்கங்களைப் பெறுவதற்காக என்னை அணுகினார்கள்.

அவர்களுக்கு ஆலோசனை வழங்கியபோது எனக்கு ஏற்பட்ட யோசனையின் விளைவாக ஆரம்பிக்கப்பட்டது தான் 'பிரீ பிரக்னன்ஸி கவுன்சில்'. திருமணமான தம்பதிகளை, குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில் அவர்களது உடலையும், மனதையும் தயார்படுத்துவது இதன் நோக்கமாகும். இதனால் மகப்பேறு காலங்களில் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல், எளிதாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்று நம்பிக்கை வழங்குகிறேன்.

குழந்தை வளர்ப்பில், இரண்டு முதல் எட்டு வயது குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த ஆலோசனைகள் வழங்குகிறேன். ஆன்லைன் வகுப்புகள் மூலம் வெளிநாட்டில் வசிப்பவர்களும் ஆலோசனை பெறுகிறார்கள்.

இந்தத் துறையில் தங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு பெண், குழந்தை வளர்ப்பு ஆலோசனைக்காக என்னை அணுகினார். அவர் மிகவும் வெகுளித்தனமான சுபாவம் கொண்டவர். அவருக்கு குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். தற்போது அவர், அனைவரும் பாராட்டும் வகையில் அவரது குழந்தைகளை வளர்த்து வருகிறார். இன்றுவரை என்னுடன் தொடர்பில் இருக்கிறார்.

பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியோடும், மன அமைதியோடும் இருந்தால்தான் கருவில் வளரும் குழந்தை உடல் மற்றும் மன அளவில் ஆரோக்கியமாக வளரும். தாயின் மனஅழுத்தம், குழந்தையையும் பாதிக்கும். எனவே உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.

தங்களின் எதிர்கால திட்டம் என்ன?

கர்ப்ப காலத்தில் மட்டுமில்லாமல், அதற்கு முந்தைய காலகட்டம் மற்றும் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சி ஆகியவையும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றிய விழிப்புணர்வை, அனைவரிடமும் ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறேன். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com