

ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள நாகமரையில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு சாலைமறியல்
ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கும் குடிநீரை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் நாகமரை ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும், ஏரியூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சாலை மறியல் நீடித்தது. உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.