சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டிய புதுச்சேரி

தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புதுச்சேரி களை கட்டியது.
Published on

புதுச்சேரி

தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலா பயணிகள் குவிந்ததால் புதுச்சேரி களை கட்டியது.

விடுமுறை

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளன. தொடர் விடுமுறை எதிரொலியாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னை, பெங்களூரு, ஐதராபாத் என பல்வேறு நகரங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்தனர். அவர்கள் பல்வேறு தேவாலயங்களுக்கு சென்று அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

வண்ண உடைகள்

புதுவை நகரின் அழகை சுற்றி பார்க்க கார், மோட்டார்சைக்கிள்களில் சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டமாகவே இருந்தது.

வண்ண வண்ண உடைகளில் ஒயிட் டவுண் பகுதிகளில் அவர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இன்று பகலில் அவ்வப்போது லேசான மழை பெய்ததால் இதமான சூழ்நிலை நிலவியது. அது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இருந்தது.

சுற்றுலா பயணிகள் வருகையால் கடற்கரை, பாண்டி மெரினா, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், சின்னவீராம்பட்டினம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் களை கட்டின.

புத்தாண்டு நெருங்க நெருங்க வெளிமாநிலங்களி லிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதன் காரணமாக புதுவை ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன.

கேளிக்கை நிகழ்ச்சிகள்

புதுவையில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஓட்டல்கள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான முன்பதிவுகளும் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாட புதுவைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரும் பணியில் புதுவை அரசுத்துறைகளும் இறங்கியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com