புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது, யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது
Published on

புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது, யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில அந்தஸ்து

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 13 முறை புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. மத்தியில் பா.ஜ.க. அரசு இருப்பதால் புதுவையில் இந்த கூட்டணி ஆட்சியின் போதே மாநில அந்தஸ்து கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் இருந்து வந்தது.

14-வது தீர்மானம்

இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது புதுவை சட்டசபையில் மாநில அந்தஸ்து தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் 14-வது முறையாக ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்ப காலதாமதமானது. இதற்கு கவர்னர் தான் காரணம் என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால் கடந்த ஜூலை 22-ந்தேதி இந்த தீர்மானம் கவர்னர் மாளிகைக்கு வந்ததாகவும், விடுமுறை தினமாக இருந்தபோதிலும் 23-ந் தேதி கையெழுத்திட்டு அதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துவிட்டதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்தது.

யூனியன் பிரதேசமாக தொடரும்

இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே மாநில அந்தஸ்து தொடர்பான மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் புதுவை அரசின் தீர்மானத்துக்கு பதில் அளித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடித்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாநில அந்தஸ்து கிடையாது, புதுவை யூனியன் பிரதேசமாகவே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதில் புதுவை ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com