

நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு காலி பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில் நேற்று காலை வந்தது. இதற்காக ரெயில்வே கேட் காலை சுமார் 5.20 மணிக்கு மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து சரக்கு ரெயில் காலி பெட்டிகளுடன் நிலையத்துக்குள் வந்தது. சரக்கு ரெயில் என்ஜின் திசை மாற்றும் பணி நடந்தது.
என்ஜின் திசை மாற்றும் பணி முடிந்ததும் சரக்கு ரெயில் மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதன் பின்னர் ரெயில்வே கேட் காலை 6.10 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 50 நிமிடம் தாமதத்துடன் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. நீடாமங்கலம் மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலை திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும். அதேசமயம் நீடாமங்கலத்தையும் வையகளத்தூரையும் இணைக்கும் வகையில் பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பால பணியை விரைவுபடுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.