மழைக்கால கூந்தல் பராமரிப்பு

மழைக்காலங்களில் ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கலரிங் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை தலை முடிக்கு சேதம் விளைவிக்கும். கூந்தலுக்கு வண்ணம் பூசுவதற்காக மருதாணி உபயோகிப்பது அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
மழைக்கால கூந்தல் பராமரிப்பு
Published on

கோடைகாலத்தில் வறட்சியின் பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல், மழைக்காலத்தில் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து போகும். ஈரப்பதத்தோடு எண்ணெய்ப் பசை கலக்கும்போது, கூந்தலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். ஆகவே மழைக்காலத்தில் கூந்தலை அன்றாடம் முறையாகப் பராமரிப்பது முக்கியம்.

மழைக்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிப்பது அவசியம். அதிகமாக எண்ணெய்ப் பசை கொண்டவர்கள், மென்மையான ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். சீயக்காய், பாசிப்பயறு மாவு, அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு கூந்தலைப் பராமரிப்பது சிறந்தது.

கூந்தலை உலர வைப்பதற்கு அடிக்கடி ஹேர் டிரையரைப் பயன்படுத்தக் கூடாது. இது முடியின் வேர்க்கால்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக ஏற்படும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தேவைப்பட்டால் சாம்பிராணிப் புகை போடலாம். இது நோய்த் தொற்று ஏற்படுவதையும் தடுக்கும்.

மழைக்காலத்தில் தலையில் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இதற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

மழைக்காலங்களில் ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கலரிங் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை தலை முடிக்கு சேதம் விளைவிக்கும். கூந்தலுக்கு வண்ணம் பூசுவதற்காக மருதாணி உபயோகிப்பது அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

தலைமுடி அதிகமாக உதிர்ந்தால், எண்ணெய்யை லேசாக சூடாக்கி அதைக் கொண்டு முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்யலாம். இதன் மூலம் மயிர்க்கால்கள் வலுவடையும். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது வேறு எந்த எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். ஒரு மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கலாம். இது கூந்தலை வலுவாக்கும்.

தலைக்கு குளிக்கும்போது முதலில் வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தி பின்னர் குளிர்ந்த நீரை உபயோகிக்கலாம். ஒமேகா 3, புரோபயாடிக்குகள், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், இரும்பு, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற சத்துகள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். குறிப்பாக நெல்லிக்காய், கறிவேப்பிலை, ஆரஞ்சு போன்றவை கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் என்பதால் இவற்றை அதிகமாக சாப்பிடலாம். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com