சருமப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சிவப்பு சந்தனம்

கோடை வெயிலால் ஏற்படும் கருமை நீங்க சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனத்தூளுடன், காய்ச்சாத பால் சிறிதளவு, ரோஜா பன்னீர் சிறிதளவு கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.
சருமப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சிவப்பு சந்தனம்
Published on

யுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் சிவப்பு சந்தனம், பல்வேறு சருமப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள், சொரியாசிஸ், அதிக எண்ணெய் சுரப்பு, ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு, இளம் வயதிலேயே சருமம் முதிர்ச்சி அடைவது, வீக்கம், காயங்கள் போன்ற பல்வேறு சருமப் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.

சிவப்பு சந்தனம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். வறண்ட சருமம் கொண்டவர்கள் சிவப்பு சந்தனத்துடன் பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவினால் சரும வறட்சி நீங்கி பொலிவு அதிகரிக்கும்.

பருக்களை கிள்ளுவதால் உண்டாகும் தழும்புகள் முக அழகைக் கெடுக்கும். அதனை சிவப்பு சந்தனம் கொண்டு போக்கலாம். சிவப்பு சந்தனம் மற்றும் வேப்பிலைப் பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். இந்த பேஸ் பேக் பருக்கள் மற்றும் பருவால் வரும் தழும்பு, கரும்புள்ளிகளை நீக்கும்.

கோடை வெயிலால் ஏற்படும் கருமை நீங்க சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனத்தூளுடன், காய்ச்சாத பால் சிறிதளவு, ரோஜா பன்னீர் சிறிதளவு கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும். வெள்ளரிச்சாறு அல்லது தயிருடன் சிவப்பு சந்தனத்தூள் கலந்து பூசி வந்தால் கருமை குறைந்து சருமம் பளிச்சிடும்.

பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், சிவப்பு சந்தனத்தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக் சரும நிறத்தை அதிகரிக்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை, 2 டேபிள் ஸ்பூன் மசித்த பப்பாளியுடன் சேர்த்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

முகத்தில் உருவாகும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை போக்க, ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தனத்தூளுடன், எலுமிச்சம் பழத்தின் சாற்றை கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் சருமத் துளைகள் இறுக்கமடைந்து அதிகப்படியான எண்ணெய்ப் பசை நீங்கும்.

அதிக சூட்டினால் கண்களில் உண்டாகும் கட்டிகள் குணமாக, சிவப்பு சந்தனத்தூளுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பசை போல தயாரித்து கட்டிகளின் மீது பற்றுப் போட வேண்டும். இரவில் தூங்கச் செல்லும் முன்பு இவ்வாறு செய்துவிட்டு காலையில் கழுவினால் சூட்டால் உண்டாகும் கட்டிகள் மறையும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com