

விழுப்புரம்,
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு
தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கான தேர்வு கடந்த மே மாதம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா 2-வது அலையின் தீவிரம் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. மேலும் மாணவ- மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை உள் மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளில் தேர்வுத்துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டன. மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டு விட்டது.
இதனை தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ந் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்ததோடு அதற்கான இணையதள முகவரிகளையும் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
மாணவ- மாணவிகள் தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 85 பள்ளிகள், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் உள்ள 61 பள்ளிகள், செஞ்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 40 பள்ளிகள் என 186 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் படித்த 10,075 மாணவர்களும், 10,754 மாணவிகளும் ஆக மொத்தம் 20,829 மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 5,167 மாணவர்களும், 5,408 மாணவிகளும் என 10,575 பேரும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 3,065 மாணவர்களும், 3,415 மாணவிகளும் என 6,480 பேரும், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 1,843 மாணவர்களும், 1,931 மாணவிகளும் என 3,774 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் மாணவ- மாணவிகள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் தெரிவித்துள்ள செல்போன் எண்ணுக்கு உடனடியாக மதிப்பெண் விவரம் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டது. மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தங்களது செல்போன்களில் மதிப்பெண்களை பார்த்து தெரிந்துகொண்டனர். மேலும் கணினி மையத்திற்கும் மாணவ- மாணவிகள் படையெடுத்து சென்று தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் பார்த்து தெரிந்துகொண்டனர். அதுமட்டுமின்றி சில மாணவ- மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று அங்குள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த மதிப்பெண் விவரங்களை பார்த்து தெரிந்துகொண்டதோடு தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை சக மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.