ஈரோட்டில் 30 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

ஈரோட்டில் 30 கடைகளின் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.
ஈரோட்டில் 30 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
Published on

ஈரோடு

ஈரோட்டில் 30 கடைகளின் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

நோட்டீசு

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து சூரம்பட்டி வலசுக்கு செல்லும் எஸ்.கே.சி.ரோட்டின் ஓரமாக சாக்கடை செல்கிறது. இந்த சாக்கடையின் மீது கடைக்காரர்கள் கான்கிரீட் சுவர்களை கட்டி வைத்து உள்ளதால், சாக்கடையை தூர்வார முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. மேலும், கனமழை பெய்யும்போது கழிவுநீருடன் மழைநீரும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. எனவே சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதுதொடர்பாக சாலையோரமாக உள்ள கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு வழங்கினார்கள். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் முன்வரவில்லை.

ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்த நிலையில் மாநகராட்சி சுகாதார அதிகாரி முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை சூரம்பட்டி எஸ்.கே.சி.ரோட்டுக்கு சென்றனர். அங்கு பொக்லைன் எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதில் கடைகள் மற்றும் வீடுகளின் முன்பு சாக்கடையின் மீது கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சுவர்கள் இடித்து அகற்றப்பட்டன. சுமார் 30 கடைகள் மற்றும் வீடுகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதையொட்டி சூரம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சாக்கடைகளில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் வகையில் இடைவெளி விட்டு கான்கிரீட் அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். ஆனால் சுத்தம் செய்யவே முடியாத வகையில் கான்கிரீட் சுவர் கட்டப்பட்டு உள்ளது. அதை அகற்ற சொல்லி எச்சரிக்கை விடுத்தும் அகற்றப்படவில்லை. எனவே பொக்லைன் எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

சூரம்பட்டி நால்ரோடு அருகில் எஸ்.கே.சி.ரோட்டில் சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு சாலையோரமாக மின்கம்பம் அமைக்கப்படாமல், சுமார் 10 அடி இடைவெளிவிட்டு மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அருகில் உள்ள கடைக்காரர்கள் மின்கம்பம் வரை ஆக்கிரமித்து கடை அமைத்துவிடுகிறார்கள். எனவே மின்கம்பத்தை சாலையோரமாக நட்டு வைக்க நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com