

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஓலைப்பாடி புதிய காலனியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 40). இவர் கத்தார் நாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சசிக்குமார் கடந்த மாதம் மீண்டும் கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி சசிக்குமார் இறந்து விட்டதாக, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அவருடைய மனைவி ஆனந்திக்கு தகவல் கிடைத்தது. இதனால் சசிக்குமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவை சந்தித்து ஆனந்தி மனு கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சசிக்குமார் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.