நடை பயிற்சி செய்ய கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: வீரர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நடை பயிற்சி செய்ய கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
நடை பயிற்சி செய்ய கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: வீரர்கள், அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி செய்யவும், விளையாட்டு போட்டிகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கட்டண உயர்வை வாபஸ் பெற கோரி குமரி மாவட்ட அனைத்து விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ரத்தினபாண்டியன், கூடைப்பந்து கழக செயலாளர் பிரேம்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் மகேஷ், ஷேக்தாவுது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி அந்தோணி, முன்னாள் கவுன்சிலர் சாகுல்அமீது மற்றும் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசியபோது கூறியதாவது:

நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கட்டணத்தை அரசு உயர்த்தி இருப்பதால் விளையாட்டு வீரர்வீராங்கனைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இங்கு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர் இல்லை. திறமையான வீரர்களே பயிற்சி அளிக்கிறார்கள். அப்படி இருக்க பயிற்சி கட்டணத்தை மட்டும் உயர்த்த வேண்டிய அவசியம் என்ன?.

தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கு விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. ஆனால் வீரர்களை உருவாக்க வேண்டிய நோக்கத்தில் அரசு செயல்படவில்லை. மக்களின் தேவையை அறிந்து செயல்படும் அரசாகவும் இல்லை. இனியாவது வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com