பெண்ணிடம் ரூ.44 லட்சம் இழந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

ஆன்லைனில் நூதன முறையில் பெண்ணிடம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரூ.44 லட்சத்தை இழந்தார். மேலும் 11 பேரிடம் மோசடி நடந்துள்ளது.
பெண்ணிடம் ரூ.44 லட்சம் இழந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
Published on

புதுச்சேரி

ஆன்லைனில் நூதன முறையில் பெண்ணிடம் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரூ.44 லட்சத்தை இழந்தார். மேலும் 11 பேரிடம் மோசடி நடந்துள்ளது.

பேஸ்புக் நட்பு

வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பேஸ்புக் கணக்கில் அழைப்பு வந்தது.

மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், தான் வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், தான் ஓரிரு மாதங்களில் பணிஓய்வு பெற உள்ளேன். எனவே எனது சேமிப்பில் 4.5 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு தாங்கள் உதவ வேண்டும் என ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் உதவிக்கேட்டுள்ளார். இதனை உண்மை என நம்பி அவரும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு பேஸ்புக் மூலம் தலைமை ஆசிரியருக்கு நட்பு ஏற்பட்டது.

ரூ.44 லட்சம் இழப்பு

மேலும் பார்சலில் பணம் அனுப்பி வைப்பதாக தெரிவித்து இந்திய தூதரகம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பேசுவதாகவும் பார்சலை பெற வரிசெலுத்தக்கோரி அவரிடம் 13 தவணைகளாக ரூ.43 லட்சத்து 90 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. அதன்பின் வெளிநாட்டில் இருந்து பேசிய பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பணப்பார்சலும் வரவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பணத்தை யாராவது பார்சலில் அனுப்புவார்களா? என்றுகூட தெரியாமல் ஒரு தலைமை ஆசிரியர் பெண்ணிடம் ரூ.44 லட்சத்தை இழந்தது விந்தையாக உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐ.டி. பெண் ஊழியர்

புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. ஐ.டி. ஊழியர். இவரின் செல்போன் எண்ணுக்கும் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் ஆன்லைன் மோசடி கும்பல், உங்களுடைய வங்கி கணக்குகளில் தொகை அதிகம் உள்ளது. அதற்கான காரணத்தை சொல்லாவிட்டால் உங்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன பிரியா அவர்கள் கூறிய வங்கிகணக்கில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அனுப்பி உள்ளார்.

மேலும் புதுவையை சேர்ந்த ஹரிஷ் என்பவரில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 90 ஆயிரமும், மூலக்குளத்தை சேர்ந்த சத்தியா என்பவரிடம் ரூ.3 லட்சத்து 19 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவரிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், பான் கார்டு அப்டேட் செய்வதாக கூறி 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரமும், ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளது என்ற விளம்பரத்தை நம்பி 2 பேரிடம் ரூ.85 ஆயிரமும் மோசடி நடந்துள்ளது.

60 லட்சம் மோசடி

கடந்த 3 நாட்களில் மட்டும்மொத்தம் 12 பேரிடம் ஆன்லைனில் நூதன முறையில் பல்வேறு முறையில் ரூ.59 லட்சத்து 81 ஆயிரம் மோசடி நடந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com