தேனி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட கலெக்டர் அரசு ஜீப்பில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்

தேனி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை கலெக்டர் முரளிதரன் மீட்டு அரசு ஜீப்பில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
தேனி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்ட கலெக்டர் அரசு ஜீப்பில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்
Published on

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று போடி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடந்த காய்ச்சல் கண்டறியும் முகாம்களை ஆய்வு செய்ய காரில் சென்று கொண்டு இருந்தார். தேனி-போடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை சந்திப்பு அருகில் சென்ற போது, எதிரே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த போடியை சேர்ந்த தர்மர், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஓடைப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். இதை பார்த்த கலெக்டர் முரளிதரன் உடனடியாக தனது காரை நிறுத்த சொன்னார். இதையடுத்து கார் நின்றதும் கலெக்டர் ஓடிச்சென்று காயம் அடைந்த நபர்களை மீட்டார். மேலும் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

அரசு ஜீப்பில் அனுப்பி வைப்பு

அப்போது அந்த வழியாக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி அரசு ஜீப்பில் வந்தார். அவரும் ஜீப்பை நிறுத்தி மீட்பு பணியில் இணைந்தார். இதையடுத்து அந்த ஜீப்பில், காயம் அடைந்த 2 பேரையும் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார். பின்னர் கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காயம் அடைந்த இருவருக்கும் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே கலெக்டர் மீட்பு பணியில் ஈடுபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கலெக்டரின் மனிதாபிமானமிக்க செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

விபத்து நடந்த புறவழிச்சாலை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே, அங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com