

புதுச்சேரி
புதுவையில் சில்மிஷம் செய்த ரவுடியை கத்தியால் வெட்டிய திருநங்கை காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
திருநங்கையிடம் சில்மிஷம்
புதுச்சேரி உருளையன்பேட்டை அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி சிவா (வயது 32). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த குட்டி சிவா பூமியான் பேட்டை லாம்போர்ட் சரவணன் நகர் பகுதியில் திருநங்கையை சந்திக்க சென்றார்.
அங்கு அவர், திருநங்கையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த திருநங்கை செல்போனில் தொடர்பு கொண்டு தனது நண்பர்களுக்கு தகவல் கொடுக்கவே சிறிது நேரத்தில் பூமியான் பேட்டை பாவாணர் நகர் பகுதியை சேர்ந்த சக்தி மற்றும் சுனில் உள்பட 4 பேர் கத்தியுடன் வந்து குட்டி சிவாவை ஓட,ஓட விரட்டி தாக்கினார்கள். இதில் தலையில் வெட்டுக்காயம் அடைந்த குட்டி சிவா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
3 பேர் கைது
இது குறித்து ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் குட்டி சிவா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்டி சிவாவை வெட்டியதாக திருநங்கை மற்றும் அவரது காதலன் சக்தி, நண்பர் சுனில் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் மூவரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.