

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சிட்டாம்பூண்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 42), ரவுடியான இவர் மீது அனந்தபுரம் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சுந்தரமூர்த்தியை அனந்தபுரம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுந்தரமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.இதையடுத்து சுந்தரமூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.