தனியார் வர்த்தக நிறுவனத்தில் ரூ.17 லட்சம் திருட்டு
பாடாலூர்:
வர்த்தக நிறுவனம்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் ஜியோ மார்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே இயங்கி வரும் இந்த வர்த்தக நிறுவனத்தில் ஏராளமான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டு, மொத்த விற்பனை மற்றும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் அந்த நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றனர். வியாபாரத்தில் கிடைத்த இருப்பு பணம், அந்த நிறுவனத்தின் ஒரு அறையில் உள்ள இரும்பு பெட்டகத்தில் வைத்து பூட்டப்பட்டிருந்தது.
ரூ.17 லட்சம் திருட்டு
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் அந்த நிறுவனத்தை திறக்க வந்தனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது பற்றி அந்த நிறுவனத்தின் மேலாளர்களில் ஒருவரான ஷேக் பர்க்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு வந்த அவர், நிறுவனத்திற்குள் சென்று பார்த்தபோது, இரும்பு பெட்டகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சத்து 25 ஆயிரத்து 130 மற்றும் 2 மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்க் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் பாடாலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் அந்த நிறுவன கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து, இரும்பு பெட்டகத்தின் பூட் டை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

