பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலையின் ரூ.19 கோடி சொத்துக்கள் பறிமுதல் - ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை

பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலைக்கு சொந்தமான ரூ.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலையின் ரூ.19 கோடி சொத்துக்கள் பறிமுதல் - ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை
Published on

மும்பை, 

பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலைக்கு சொந்தமான ரூ.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

பலத்தை நிரூபிக்க சுற்றுப்பயணம்

பா.ஜனதா கட்சியை சேர்ந்த மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே. இவர் 2014-ம் ஆண்டு மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தபோது செல்வாக்கு மிக்க மந்திரியாக இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்த பங்கஜா கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்தார். சமீபத்தில் அவர் 10 மாவட்டங்களுக்கு 'சிவ் சக்தி யாத்ரா' சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தனது சொந்த பலத்தை நிரூபிக்க அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கட்சி ரீதியாக அல்லாமல், தன்னிச்சையாக அவர் பயணத்தை மேற்கொண்டு இருந்தார்.

ரூ.19 கோடி சொத்துக்கள் பறிமுதல்

இந்தநிலையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பங்கஜா முண்டே தொடர்புடைய சர்க்கரை ஆலையின் ரூ.19 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து உள்ளனர். ஜி.எஸ்.டி. வரி பாக்கி தெடர்பாக பீட் மாவட்டத்தில் உள்ள பங்கஜா முண்டேவின் வைத்தியநாத் கூட்டுறவு சர்க்கரை ஆலை சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். சர்க்கரை ஆலை பாய்லர் மற்றும் பிற தளவாடங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பங்கஜா முண்டே கூறியதாவது: திடீர் நடவடிக்கை தொடர்பான காரணம் குறித்து ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை தெரிந்து கொண்டேன். வைத்தியநாத் கூட்டுறவு சங்கம் 6 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குகிறது. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து, சர்க்கரை ஆலைகளின் மோசமான நிலை குறித்து கூறினேன். எங்கள் சர்க்கரை ஆலைக்கு நிதி உதவி கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். எங்களுடன் விண்ணப்பித்த மற்ற ஆலைக்கு உதவி கிடைத்தது. எங்களுக்கு மட்டும் நிதி உதவி கிடைக்கவில்லை. எங்களுக்கும் உதவி கிடைத்து இருந்தால், இந்தநிலை தவிர்க்கப்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com