

திருவண்ணாமலை,
ஆரணி தாலுகா அருணகிரிசத்திரம் வந்தவாசி ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தரணி (வயது 39), சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த நவநீதம் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்தார். நவநீதம், தரணியிடம் அடிக்கடி பணம் கடனாக வாங்கி அதனை உடனடியாக திருப்பியும் கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு நவநீதத்தின் மகள் ஜோதி (39) மற்றும் அவரது கணவர் பாபு (49), ஜோதியின் தம்பி குணசேகர் ஆகியோர் தரணியை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அவர்களுடன் ஜோதியின் உறவினர் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (55) என்பவரும் வந்து உள்ளார். அப்போது தாங்கள் மகளிர் குழு அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், அதற்கு வெளிநாட்டில் இருந்து ரூ.5 கோடி வர உள்ளதாகவும் கூறியுள்ளனர். அதற்கு முன்பணமாக ரூ.25 லட்சம் டெபாசிட் செய்தால் அந்த பணம் உடனடியாக கிடைத்து விடும். அதனால் எங்களுக்கு ரூ.25 லட்சம் கடனாக தரும்படி கேட்டு உள்ளனர். இந்த ரூ.5 கோடி கிடைத்த 3 மணி நேரத்தில் ரூ.25 லட்சத்துடன் கூடுதலாக ரூ.2 லட்சம் சேர்த்து ரூ.27 லட்சமாக நாங்கள் வழங்குகிறோம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதையடுத்து தரணி அவரது கணவரின் தம்பி உதயகுமாரிடம் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் தனது தரப்பில் ரூ.15 லட்சம் என ரூ.25 லட்சத்தை கடந்த 2.5.2017 அன்று ஜோதிடம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜோதி, அவரது கணவர் பாபு, ஜோதியின் தம்பி குணசேகர் மற்றும் அவரது தரப்பினர் பணத்தை திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்து உள்ளனர். போன் செய்தாலும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் தரணி புகார் செய்தார். இதையடுத்து அந்த புகாரை திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்தை கொடுக்க ஒப்பு கொண்ட ஜோதி தரப்பினர் 25.7.2018 அன்று ரூ.50 ஆயிரம், 3.8.2018 அன்று ரூ.30 ஆயிரம், 29.12.2018 அன்று ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்து உள்ளனர்.
மீதி பணத்தை அவர்கள் 1.1.2019 அன்று தருவதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
மீண்டும் தரணி தனக்கு தரவேண்டிய பணத்தை ஜோதி மற்றும் அவரது தரப்பினரிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நவநீதம், அவரது மகள் ஜோதி, பாபு, குணசேகர், கண்ணதாசன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஜோதி, பாபு மற்றும் கண்ணதாசன் ஆகிய 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.