ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்க முயற்சி

அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேர சலுகை அளிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்க முயற்சி
Published on

புதுச்சேரி

அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேர சலுகை அளிப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேலை நேரம் குறைப்பு

புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வேலை நேர சலுகை அளித்து இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 2 மணி நேரம் வேலை குறைப்பு செய்திருப்பது அவர்களது அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக கருதுகிறோம். பெண்களை பலவீனப்படுத்துவதாக உள்ளது.

அரசு திட்டங்கள் நிலை என்ன?

கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் போதிய நிதி ஆதாரம் இல்லாத போதும் எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இதை மக்களோடு சேர்ந்து நாங்களும் வரவேற்றாலும், அதற்கான நிதி ஆதாரங்கள் இதுவரை ஒதுக்கப்படவில்லை. ஆனாலும் முதல்-அமைச்சர் திட்டங்களை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

ஒரு மாதம் ஆன நிலையில் அந்த திட்டங்களுக்கு கவர்னர் அனுமதி அளித்தாரா? அதற்கான நிதி ஆதாரம் கிடைத்ததா? போன்ற எந்த தகவலும் அரசு தரப்பில் இருந்தும், கவர்னர் தரப்பில் இருந்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.

தி.மு.க. வேடிக்கை பார்க்காது

பெண்களின் சமூக மற்றும் பணி பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும் அரசு தமது கூட்டணி கட்சியின் சித்தாந்தத்தை பெண்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியாகவே கவர்னர் அறிவிப்பை பார்க்க முடிகிறது. அரசு துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலையில் 2 மணிநேரம் வேலை குறைப்பு என்பதை மாலையில் மாற்ற அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

புதுச்சேரி அரசு பெண்களுக்கு அறிவித்த திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற்று அத்திட்டங்களை நடப்பு நிதியாண்டில் நிறைவேற்ற முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு கவர்னர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதை விடுத்து நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை அரசு ஊழியர்கள் வழியாக மக்களிடம் புகுத்த முற்பட்டால் தி.மு.க. வேடிக்கை பார்க்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com