குழந்தைகளின் கல்விச் செலவுக்கான சேமிப்பு

குழந்தைகளைத் தரமான பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதிக கட்டணம் வசூலிப்பவை தான் 'நல்ல பள்ளிகள்' என்று நினைப்பது தவறாகும்.
குழந்தைகளின் கல்விச் செலவுக்கான சேமிப்பு
Published on

வ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டு, மாணவர்களிடம் ஒருவித தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும். ஆனால் 'பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும்' என்ற உணர்வு, பல பெற்றோர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

பள்ளிக் கட்டணம் மட்டுமில்லாமல், புத்தகம், சீருடை, இதர கல்வித் தேவைகள் என்று ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் கல்விக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்றது.

'கடன் வாங்கி சமாளித்துவிடலாம், நகைகளை அடகு வைத்து பள்ளிக் கட்டணம் கட்டி விடலாம்' என்று நீங்கள் நினைக்கலாம். இதனால் பண விரயம் ஆவதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கும். 'சரியான திட்டமிடுதல்' மூலமே இந்த சவாலை உங்களால் சிரமம் இல்லாமல் எதிர்கொள்ள முடியும். அதற்கான வழிகளைத் தெரிந்துகொள்வோம்.

குழந்தைகளைத் தரமான பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதிக கட்டணம் வசூலிப்பவை தான் 'நல்ல பள்ளிகள்' என்று நினைப்பது தவறாகும். ஒரு பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்ப்பதற்கு முன்பு, அதன் கட்டணங்கள் உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றதா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்குச் செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணம் எவ்வளவு என்று பாருங்கள். உதாரணமாக உங்கள் குழந்தைக்கான ஓராண்டு கல்விக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம் என வைத்துக் கொள்வோம். அதை 10 மாதங்களுக்கு கணக்கிட்டால் மாதம் ரூ.4,000 ஆகும். நீங்கள் இரண்டு குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் இந்த தொகை மாதம் ரூபாய் 8 ஆயிரமாக உயரும்.

உங்களுடைய மாத சம்பளத்தில் குடும்பச் செலவுகள் போக, குழந்தைகளின் கல்விக்கு இந்தத் தொகையை உங்களால் ஒதுக்க முடியுமா? என்பது பற்றி யோசித்து, திட்டமிட்டு முடிவெடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4 ஆயிரம் ஒதுக்கி வைத்தீர்கள் என்றால், வருடத்தின் முடிவில் ரூபாய் 48 ஆயிரம் சேர்ந்திருக்கும். அதில் பள்ளிக் கட்டணமாக ரூபாய் 40 ஆயிரம் கட்டினால் மீதம் இருக்கும் தொகையை சீருடை, போக்குவரத்து, சுற்றுலா போன்ற இதர கட்டணங்களுக்குச் செலவிடலாம்.

ஒவ்வொரு ஆண்டும், எந்த மாதம் பள்ளியில் கட்டணம் செலுத்த வேண்டுமோ, அந்த சமயத்தில் முதிர்ச்சி அடையும் விதமாக வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு ஒன்று தொடங்குங்கள். மாதந்தோறும் உங்கள் சம்பளப் பணம் வந்ததும் இந்த ஆர்.டி. கணக்கில் தானாகவே வரவு வைக்கும்படி செய்து விட்டால், ஒரு வருடம் முடியும்போது அதை அப்படியே பள்ளியில் கட்டி விடலாம். பின்னர் உடனடியாக அடுத்த ஆர்.டி. தொடங்கி அடுத்த கல்வியாண்டுக்காக சேமிக்கத் தொடங்க வேண்டும்.

இவ்வாறு திட்டமிடுவதன் மூலம், குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை பெற்றோர்கள் எளிதாக சமாளிக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com