கன்னியாகுமரியில் கடல் சீற்றம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரியில் கடல் சீற்றம்
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

கன்னியாகுமரி

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

இதையடுத்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண படகில் சென்று பார்த்து ரசித்து விட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகளை இயக்கி வருகிறது.

கடல் சீற்றம்

அதன்படி நேற்று காலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்ப்பதற்காக ஆவலுடன் படகுத்துறையில் காத்திருந்தனர்.

அப்போது திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்வதும், உயர்வதுமாக இருந்தது. மேலும் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகளில் எழுந்து கரையில் உள்ள பாறைகளில் ஆக்ரோஷத்துடன் மோதி சிதறியது.

3 மணிநேரம் தாமதம்

இதன் காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் சுமார் 3 மணிநேரத்துக்கு பிறகு நீர்மட்டம் சீரானது. இதையடுத்து காலை 11 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com