கரூரில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை-வணிகர்கள் சங்க தலைவர் பேட்டி

கரூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வணிகர்கள் சங்க தலைவர் ராஜூ கூறினார்.
கரூரில் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை-வணிகர்கள் சங்க தலைவர் பேட்டி
Published on

கரூர்,

கடைகளுக்கு சீல்

கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜூ தலைமையில் 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைத்தனர்.

புகையிலை விற்பனை செய்யக்கூடாது

இந்த சூழ்நிலையில் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் மாவட்ட வர்த்தக தொழில் கழகம் சார்பில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

இதையடுத்து, கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று கரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது. இதனை மீறி விற்பனை செய்தால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. மேலும், சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வணிகர் சங்க செயலாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com