குறைந்த கலோரிகள் கொண்ட கடற்பாசிகள்

கடற்பாசியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இதில் உள்ள புரதம் எளிதில் செரிமானமாகும்.
குறைந்த கலோரிகள் கொண்ட கடற்பாசிகள்
Published on

காய்கறிகள், பழங்கள் போன்று உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுப் பொருட்களில் கடற்பாசியும் ஒன்று. ஆல்வெர்சி, குளோரெல்லா, உல்வா, ஸ்பைருலினா, லாமினேரியா, போர்பிரா, அகார் அகார் போன்றவை உணவாகப் பயன்படும் கடற்பாசிகளில் குறிப்பிடத்தகுந்தவை. இதில் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. கடற்பாசியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடைக்குறைப்பில் ஈடுபடுபவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம். இதில் உள்ள புரதம் எளிதில் செரிமானமாகும். கடற்பாசிகளின் நன்மைகள் குறித்து மேலும் சில தகவல்கள் இதோ...

ஸ்பைருலினா:

ஸ்பைருலினாவில் அதிகப்படியான புரதச்சத்தும், இரும்புச்சத்தும் உள்ளது. இது ரத்த சோகையைத் தடுக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இதில் உள்ள துத்தநாகச் சத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இதில் இருக்கும் அமிலங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும்.

லாமினேரியா:

தைராய்டு ஹார்மோனின் உற்பத்தி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் 'அயோடின்' லாமினேரியாவில் அதிகமாக உள்ளது. இதில் உள்ள வைட்டமின் 'சி' புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். லாமினேரியாவில் கலோரிகளும், கொழுப்பும் குறைந்த அளவில் இருப்பதால் எடைக் குறைப்புக்கு உதவும்.

குளோரெல்லா:

புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கும் குளோரெல்லா, உடலுக்குத் தேவையான நியூக்ளிக் அமிலங்களை வழங்குகிறது.

போர்பிரா:

இவற்றில் உடலுக்குத் தேவையான புரதம் அதிக அளவில் உள்ளது. இவ்வகை கடற்பாசிகளில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் புற்றுநோயை உருவாக்கும் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

அகார் அகார்:

அகார் அகார் தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீராக்க உதவும். ரொட்டி, பாலாடைக்கட்டி, இறைச்சி, மீன் ஆகியவற்றை பதப்படுத்தவும் பயன்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com