‘பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது’-சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் நீதிபதி பேச்சு

பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்று சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்டநீதிபதி சுமதிசாய்பிரியா தெரிவித்தார்.
‘பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது’-சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் நீதிபதி பேச்சு
Published on

சிவகங்கை,

பெண்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்று சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்டநீதிபதி சுமதிசாய்பிரியா தெரிவித்தார்.

கருத்தரங்கம்

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தேசிய மகளிர் ஆணையமும் இணைந்து நடத்திய பெண்கள் நலம் குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகித்தார். முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-.

1992-ம் ஆண்டு ஜனவரி 31-ல் தேசிய மகளிர் ஆணையம் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் பெண்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் கிடைக்க வேண்டும் என்பதாகும். பெண்கள் தங்களுடைய உரிமைகளை எக்காரணம் கொண்டு விட்டு கொடுக்க கூடாது. அது போல் கடமைகளை நிறைவேற்றவும் தயங்க கூடாது.

பெண்களுடைய முன்னேற்றம் தனிப்பட்டதாக இல்லாமல் சமுதாயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். பணிக்குசெல்லும் பெண்கள் பணி செய்யும் இடங்களில் ஏற்படக்கூடிய இடர்பாடுகளை வெளியில் சொல்லாமல் தமக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் தைரியமாக தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வு காண வேண்டும். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்

கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:-

நமது அரசியலமைப்பு சட்டத்தில் பெண்களுக்கு சம உரிமை அளித்து வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அரசுத்துறைகள் மற்றும் தனியார் துறைகளிலும் அதிக அளவில் பெண்கள் பணி மேற்கொண்டு வருகிறார்கள். பெண்கள், மாணவிகள் தங்களுடைய உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும், அடிப்படை சட்டங்கள் பற்றியும் தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். அடிப்படை சட்டங்கள் குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகி தெரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் குடும்பநலநீதிபதி முத்துகுமார், மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி சரத்ராஜ், போக்சோ நீதிமன்ற நீதிபதி பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, வக்கீல் பஞ்சு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com