கவர்ச்சி நடிகை ஷகிலா பட விழாவில் பங்கேற்க தடை

நடிகை ஷகிலா பட விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கவர்ச்சி நடிகை ஷகிலா பட விழாவில் பங்கேற்க தடை
Published on

மலையாள திரை உலகில் ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் ஷகிலா. இவரது படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பின. மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களை விட ஷகிலா படங்கள் அதிக வசூல் ஈட்டி திரை உலகினரை ஆச்சரியப்படுத்தின. ஒரு கட்டத்தில் ஷகிலா ஆபாசமாக நடிப்பதாக கண்டித்து மலையாள படங்களில் அவரை நடிக்கவிடாமல் வெளியேற்றினர். இதன் பின்னணியில் முன்னணி நடிகர் ஒருவரின் சதி இருந்ததாக புகார்கள் கிளம்பின. ஷகிலா வாழ்க்கை சினிமா படமாகவும் வெளிவந்தது. தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல மலையாள டைரக்டர் ஓமர் லுலு, தான் இயக்கிய 'நல்ல சமயம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை கோழிக்கோடு நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஷகிலா தலைமையில் நடத்த ஏற்பாடு செய்து அதற்கான அனுமதியையும் வாங்கி இருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்து இருந்தது. ஏ பட டிரெய்லரை ஷகிலா வெளியிடுகிறார் என்பதை அறிந்து விழாவுக்கு செல்ல ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் கடைசி நேரத்தில் ஷகிலாவுக்கு தடைவிதிக்கும் விதமாக விழாவுக்கு கொடுத்த அனுமதியை வணிக வளாகம் ரத்து செய்து விட்டது. ஷகிலா இல்லாமல் விழாவை நடத்தினால் அனுமதி தருகிறோம் என்றும் தெரிவித்தது. வணிக வளாக நிர்வாகத்தின் செயலை டைரக்டர் ஓமர் லுலு கண்டித்துள்ளார்.

ஷகிலா கூறும்போது, "எனக்கு இதுபோல் நடப்பது முதல் முறையல்ல. ரசிகர்கள் என்னை வரவேற்கிறார்கள். ஆனால் சிலர் எனக்கு எதிராக செயல்படுகிறார்கள்'' என்று வருத்தம் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com