சித்தராமையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மூலம் டி.கே.சிவக்குமாரை ஓரங்கட்ட முயற்சி; நளின்குமார் கட்டீல் சொல்கிறார்

சித்தராமையாவின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மூலம் டி.கே.சிவக்குமாரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சி செய்வதாக நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
சித்தராமையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மூலம் டி.கே.சிவக்குமாரை ஓரங்கட்ட முயற்சி; நளின்குமார் கட்டீல் சொல்கிறார்
Published on

பெங்களூரு:

பெங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

டி.கே.சிவக்குமாரை ஓரங்கட்ட முயற்சி

காங்கிரஸ் கட்சியில் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்-மந்திரி பதவிக்காக ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. தற்போது சித்தராமையா தனது 75-வது பிறந்தநாளை சித்தராமோற்சவம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். சித்தராமையா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவது, அரசியலில் தன்னை உயர்த்தி கொள்வதற்காக தான்.

இவ்வாறு அரசியலில் தன்னை உயர்த்தி, டி.கே.சிவக்குமாரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்காக 75-வது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதனால் டி.கே.சிவக்குமார் எப்போது பேசினாலும் தனிப்பட்ட நபரை புகழ்ந்து பேச வேண்டாம், கட்சியின் பெருமையை பற்றி மட்டுமே தொண்டர்கள் பேச வேண்டும் என்று கூறி வருகிறார். சித்தராமோற்சவம் கொண்டாடுவதன் மூலமாக பா.ஜனதாவுக்கு எந்த பயமோ, பிரச்சினையோ இல்லை. காங்கிரஸ் தலைவர்களுக்குள் தான் பிரச்சினை உருவெடுதது வருகிறது.

காங்கிரசுக்கு தகுதி இல்லை

சித்தராமோற்சவம் கொண்டாடுவதற்கு தேவையான உதவிகளை சித்தராமையாவுக்கு செய்து கொடுக்க பா.ஜனதா தயாராக உள்ளது. சித்தராமையா எந்த கட்சியில் உள்ளாரோ, அந்த கட்சியில் அவர் சொல்வதுதான் நடக்க வேண்டும். தனக்கு எதிராக இருப்பவர்களை எப்படி அழிக்க வேண்டும் என்பதை சித்தராமையா நன்கு அறிந்து வைத்திருப்பார். அதனால் தான் தனது 75-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி டி.கே.சிவக்குமாரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட பார்க்கிறார்.

சித்தராமோற்சவம் நிகழ்ச்சிக்காக 5 லட்சம் இல்லை, 10 லட்சம் பேரை திரட்டினாலும், பா.ஜனதாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஊழல் பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் தலைவாகளுக்கு எந்த தகுதியும் இல்லை. ஏனெனில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com