இந்தியா முழுவதும் தனியாக பயணித்த சிந்து

தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை (ஐவகை நிலங்கள்), சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 45 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தேன்.
இந்தியா முழுவதும் தனியாக பயணித்த சிந்து
Published on

வால்களையும், அவற்றை கடப்பதற்கான தன்னம்பிக்கையையும் நான் மேற்கொண்ட பயணமே எனக்குத் தந்தது என்கிறார் சிந்து. உலகில் பெண்கள் சுதந்திரமாகப் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்தியா முழுவதும் தனியாகச் சுற்றுப்பயணம் செய்துவரும் இவர், தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, சொந்த ஊரான புதுக்கோட்டையில் இருந்து தாய், மூத்த சகோதரி மற்றும் தம்பியோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார் சிந்து. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை விடுதியில் தங்கிப் படித்தார். விடுமுறை நாட்களில் வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் செல்லும்போதும், பேருந்தில் இருந்து இறங்கிய பின்பு வீடு செல்லும் வழியிலும் நண்பர்கள், தம்பி ஆகியோரின் துணையோடு தான் பயணித்திருக்கிறார். இதைப் பார்த்த சிலர் தனியாகச் செல்வதற்கு அஞ்சுபவர் என்று சிந்துவை கேலி செய்தனர்.

அவர்களின் விமர்சனங்கள்தான் இந்த உலகைத் தனியாகச் சுற்றி வர வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது என்ற சிந்து, தனது பயணங்களைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

முதலில் இந்தியாவைச் சுற்றி வர வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி, பயணத்திற்கான பணத்தையும் சம்பாதித்துக் கொண்டேன்.

2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் என்னுடைய முதல் பயணத்தைத் தொடங்கினேன். கேரளாவில் இருந்து காஷ்மீர் வரை 100 நாட்கள் பயணித்தேன். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும்போது, எனக்கு இருந்த சவால்களில் முதன்மையானது பணத் தேவைதான். அப்போது என்னிடம் மிகவும் குறைந்த பணமே இருந்தது. தன்னம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டு, எனது பயணத்தின் நோக்கம், அதில் எனக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தேன்.

பதிவுகளைப் பார்த்த பலர், எனக்கு பொருளாதார ரீதியாக உதவினார்கள். குறிப்பாக, பெண்கள் அவர்கள் வேலை நேரத்தைத் தாண்டி அதிக நேரம் வேலை செய்து, அந்தப் பணத்தை எனக்கு அனுப்பி, பெண்களுக்காக நீங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இது எல்லாருடைய கனவாக இருக்க வேண்டும் என்று அனுப்பிய குறுஞ்செய்திகள், என்னை தொடர்ந்து ஊக்கத்தோடு பயணிக்க வைத்தது.

அடுத்ததாக மொழி தெரியாததால் சிரமப்பட்டேன். ஒவ்வொரு மாநிலத்துக்கு செல்லும்போதும், அந்த மக்களோடு தொடர்பு கொள்ள மொழி முக்கியமானதாக இருந்தது. சவால்களையும், அவற்றை கடந்து செல்வதற்கான தன்னம்பிக்கையூட்டும் மனிதர்களின் துணையையும் பயணமே எனக்கு அளித்தது.

ஏழு சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களிலும் தனியாகப் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்து, 150 நாட்கள் பயணித்தேன்.

இந்தப் பயணங்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமை அளித்தது. அதைத் தொடர்ந்து 14 ஆயிரம் அடி உயரம் கொண்ட பனி மலைகளில் ஏறினேன். இதுவரை 5 முறை பனி மலைகளில் ஏறி இருக்கிறேன். இந்தியா முழுவதும் 24 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள் சென்றிருக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை (ஐவகை நிலங்கள்), சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 45 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தேன். மொழி அறிவு, கல்வி அறிவு தாண்டி நம்மிடம் இருக்கும் திறமைகளைக் கொண்டும் நம்மால் முன்னேறிச் செல்ல முடியும் என்பதை இந்தப் பயணம் எனக்குக் கற்றுத் தந்தது.

நான் நன்றாக சமைப்பேன், தோட்டக்கலை மிகவும் பிடிக்கும். அது மட்டுமின்றி டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றிய தெளிவையும் பெற்றிருந்தேன். இவற்றை எல்லாம், பயணம் செல்லும் இடங்களில், எனக்கான தேவைகளுக்கான வருமானத்தை ஈட்டும் வழிகளாக மாற்றிக்கொண்டேன். வாய்ப்புகள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான், நம்முடைய வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

புதியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும், ஏதேனும் ஒன்றை செய்துவிட வேண்டும் என்ற ஆசையும், பைக் ரைடிங் கற்றுக்கொள்ள உதவியது. எல்லோருக்கும் ஆசைகள் இருக்கின்றன. ஆசை

களையும், கனவுகளையும் எவ்வாறு நம்முடைய வெற்றியாக மாற்றுவது என்பதில்தான் சிக்கல் ஏற்படுகிறது. முதலில் நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதை, நன்றாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பின்பு அதை செயல்படுத்துவதற்கான திட்டங்களாக மாற்ற வேண்டும். தன்னம்பிக்கையோடு அதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்போது, ஆரம்பத்தில் நம்மை எதிர்த்தாலும், நம்முடைய வெற்றியைக் கண்டு அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை என் அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.

பயணங்கள் எப்போதும் ஒருவருக்குள் புதிய மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். என் வாழ்க்கையை மாற்றியதும் பயணங்கள் தான்.

தனியாகப் பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு இந்தியா என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். எப்போதும், எல்லா இடங்களிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். அதை நமக்கு எவ்வாறு பாதிப்பில்லாத வகையில் மாற்றிக் கொள்கிறோம் என்பதில்தான் நமக்கான வெற்றி தீர்மானிக்கப்படும்.

எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியம். எத்தகைய உயரத்தையும் பெண்கள் அடையலாம் என்பதை வலியுறுத்தியே என்னுடைய எவரெஸ்ட் பயணம் இருக்கும். முயற்சி செய்தால் பெண்களுக்கு வானமும் வசப்படும்'' என்கிறார் சிந்து.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com