சிவகங்கை: தூய்மை பணியாளர்கள் விசில் ஊத தடை விதித்த கவுன்சிலர்

சிவகங்கை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வீதி, வீதியாக சென்று குப்பைகளை சேகரிக்கும்போது, தங்கள் வருகை குறித்து மக்கள் அறிய வேண்டி அவர்கள் விசில் ஊதுவது வழக்கம்.
சிவகங்கை: தூய்மை பணியாளர்கள் விசில் ஊத தடை விதித்த கவுன்சிலர்
Published on

சிவகங்கை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வீதி, வீதியாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். தங்கள் வருகை குறித்து மக்கள் அறிய தூய்மை பணியாளர்கள் விசில் ஊதுவது வழக்கம்.

விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. அக்கட்சியினர் விசில்களை ஊதி பல்வேறு வகையில் கவனம் ஈர்த்து வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் விசில் ஊதுவதும் ஒருவகையில் விஜய் கட்சிக்கான பிரசாரமாக மாறிவிடக்கூடும் என கருதிய சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அயூப்கான் ஒரு முடிவெடுத்தார்.

நேற்று காலையில் தனது வார்டில் விசில் ஊதியபடி குப்பைகளை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர்களிடம் விசிலை பயன்படுத்தக்கூடாது என்று கூறினார். விசில் ஊதுவதற்கு பதிலாக சிறிய மைக்கில் ஒலிபெருக்கி உதவியுடன் அறிவிப்பது போல் தனது வார்ட்டிலும் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான உபகரணங்களை வழங்கினார்.

இதுகுறித்து அயூப்கான் கூறும்போது, "சென்னை போன்ற பெரு நகரங்களில் குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பாடல்களை ஒலிபரப்பியபடி குப்பைகளை சேகரிக்கின்றனர். அதன்படி எனது வார்டில் விசிலுக்கு பதிலாக குப்பைகளை சேகரிக்கும் விழிப்புணர்வு பாடலை ஒலிபரப்பு செய்யும்படியும் கூறி உள்ளேன். இனி என் வார்டில் விசில் சத்தம் ஒலிக்காது" என்றார். இருந்தாலும் த.வெ.க. சின்னம் என்பதால்தான், இந்த தடையை அவர் விதித்துள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com