சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை

திருப்பூர் மாவட்டம் ஆறுதொழுவு பகுதியை சேர்ந்த பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து பூஜிக்கும்படி உத்தரவு கிடைத்துள்ளது.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரி நாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது.

சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது.

பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்பட்டு, புதிய பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, ருத்ராட்சம், இரு இளநீர்கள் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 17-ந் தேதி முதல் திருவோட்டில் விபூதி,ருத்ராட்சம் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கடந்த மாதம் 25-ந் தேதி வைக்கோல் வைத்து பூஜை செய்யப்பட்டது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஆறுதொழுவு பகுதியை சேர்ந்த தங்கவேல் என்ற பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்க உத்தரவானது. இதையடுத்து இன்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இது பற்றி கோவில் சிவாச்சாரியார்கள் கூறுகையில், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com