சாதி, மதம் இல்லா சான்றிதழ் பெற்ற சினேகா

நான் சாதி, மதமற்றவராக இருக்க வேண்டும் என்று விரும்பி இந்த சான்றிதழைப் பெற்றுள்ளேன். இடஒதுக்கீடு மட்டுமே சாதி ஒழிப்புக்கான ஆயுதம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
சாதி, மதம் இல்லா சான்றிதழ் பெற்ற சினேகா
Published on

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் சினேகா பார்த்திபராஜா, தனக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தவர். சமூக அக்கறையுடன் பல்வேறு தொண்டாற்றி வரும் இவர், தற்போது கலைத்துறையிலும் கால்பதித்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு...

சாதி, மதம் இல்லா சான்றிதழைப் பெறவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

எங்கள் பெற்றோருக்கு நாங்கள் 3 பெண் குழந்தைகள். எங்களை பள்ளியில் சேர்க்கும்போது சாதி, மதம் அற்றவர்கள் என்று கூறி தான் சேர்த்தார்கள். ஆனால் படித்து முடித்ததும் வேலைக்கான தேர்வு, போட்டித்தேர்வு போன்றவற்றில் கலந்துகொண்டபோது தான் நாங்கள் சாதி, மதம் குறித்த பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு. அரசியல் அமைப்பு சட்டப்படி, எவரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற உரிமை உள்ளதைப்போல, 'பின்பற்றாமலும் இருக்கலாம்' என்பதும் அதற்குள் இருக்கும் அம்சம்தானே. எனவே அதைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். 2010-ம் ஆண்டு தொடங்கிய எனது முயற்சிக்கு, 2019-ம் ஆண்டு தான் வெற்றி கிடைத்தது.

அதன் பிறகு என்னுடைய வழிகாட்டுதலில் இதுவரை 30 பேர் வரை இச்சான்றிதழைப் பெற்றுள்ளனர்.

சாதி, மதம் இல்லா சான்றிதழ் பெற்றதும், உங்கள் மீதான சமூகத்தின் பார்வை எவ்வாறு இருந்தது?

நான் சாதி, மதம் இல்லா சான்றிதழ் பெற்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. கமல், ரோகிணி, குஷ்பூ உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் என்னைப் பாராட்டினார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். தேசிய அளவில் மட்டுமில்லாமல், இலங்கை, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருக்கும் பத்திரிகை, வானொலிகளிலும் இது செய்தியானது. பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்தன.

சாதி, மதம் இல்லா சான்றிதழ் இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

நான் சாதி, மதமற்றவராக இருக்க வேண்டும் என்று விரும்பி இந்த சான்றிதழைப் பெற்றுள்ளேன். இடஒதுக்கீடு மட்டுமே சாதி ஒழிப்புக்கான ஆயுதம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நீங்கள் மேற்கொள்ளும் சமூகப் பணிகள் குறித்து சொல்லுங்கள்?

வழக்கறிஞராக கிராமப்புற பெண்களுக்கு சட்டம் மற்றும் சமூகம் தொடர்பான விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறேன். பெண்களுக்கான உரிமைகள், வாய்ப்புகள் குறித்து பேசி வருகிறேன்.

உங்களுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் எவை?

தில்லையாடி வள்ளியம்மை விருது, புரட்சிகர பெண் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளேன். 'நாடோடிகள் 2' எனும் திரைப்படத்தின் நிறைவுக்காட்சியில் நான் பெற்ற சான்றிதழைக்காட்டி 'புரட்சியின் தொடக்கம்' என்று அங்கீகரித்தார்கள்.

கலைத்துறையில் கால்பதித்தது பற்றி கூறுங்கள்?

நாடகங்களில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. என் கணவர் தமிழ் பேராசிரியர், நாடகவியலாளர். அவர் இயக்கும் நாடகங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். உதவி இயக்குநராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறேன். 'அவள் அப்படித்தான் 2' படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com