

நாகர்கோவில்,
வீட்டில் மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தலை மறைவாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேரை கரூரில் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மேலும் ஒரு மண்ணுளி பாம்பு மீட்கப்பட்டது.
மண்ணுளி பாம்பு பதுக்கல்
குமரி மாவட்டம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் குமரேசன். ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மகன் அரவிந்த் (வயது 35). இவர் தற்போது நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண்ணுளி பாம்பு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கடந்த 23-ந் தேதி மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வன அதிகாரிகள் விரைந்து சென்று வீட்டை சோதனை நடத்தினர்.
தனிப்படை அமைப்பு
அப்போது அங்குள்ள ஒரு அறையில் தண்ணீர் பீப்பாயில் கேழ்வரகு போட்டு மண்ணுளி பாம்பை மூடி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அந்த மண்ணுளி பாம்பை மீட்டனர். இதற்கிடையே அரவிந்த் தலைமறைவானார். அவரை வனத்துறையினர் தேடி வந்தனர். மேலும் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் அரவிந்த் கரூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படையினர் அங்கு விரைந்து சென்று அரவிந்த் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் அரவிந்தும், அவருக்கு உதவிய ஐதராபாத்தை சோந்த நண்பர் வெங்கட ரமணாவும் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று ஓட்டலுக்கு அதிரடியாக சென்று இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய காரை சோதனையிட்ட போது மேலும் ஒரு மண்ணுளி பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையும் வனத்துறையினர் மீட்டனர்.அத்துடன் காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் நாகர்கோவில் அழைத்து வரப்பட்டு கோர்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.