பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கு:- குற்றம் நிரூபிக்கப்படாததால் 2 பேர் விடுதலை

வதோதராவில் பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தவறிவிட்டதாக மும்பை கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.
பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கு:- குற்றம் நிரூபிக்கப்படாததால் 2 பேர் விடுதலை
Published on

மும்பை, 

வதோதராவில் பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தவறிவிட்டதாக மும்பை கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.

மும்பை கோர்ட்டுக்கு மாற்றம்

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. இதில் 56 பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த நாள் குஜராத் வதோதராவில் உள்ள பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் அடித்து கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் ஆவர். 2003-ம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் தொடர்புடைய 21 பேரை வதோதரா கோர்ட்டு விடுவித்தது. இதை குஜராத் ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இந்த வழக்கை மும்பை சிறப்பு கோர்ட்டு மறு விசாரணை செய்ய உத்தரவிட்டது.

9 பேர் குற்றவாளிகள்

முதற்கட்ட விசாரணையில் கொலை குற்றத்தில் தொடர்புடைய 17 பேரில் 9 பேர் குற்றவாளிகள் என கடந்த 2006-ம் ஆண்டு மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய ஹர்ஷல் சோலாங்கி மற்றும் மபத் கோகில் உள்பட 4 பேர் அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வந்தனர். இந்த விசாரணை முடிந்ததும் கடந்த 2017-ம் ஆண்டு மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் ஹர்ஷல் சோலாங்கி மற்றும் மபத் கோகில் தவிர மற்ற 2 பேர் விசாரணையின் போதே இறந்துவிட்டனர். இந்த நிலையில் ஹர்ஷல் சோலாங்கி மற்றும் மபத் கோகில் இருவரையும் மும்பை கோர்ட்டு நேற்று முன்தினம் விடுவித்தது. இதன் தீர்ப்பு முழு விவரம் நேற்று வெளியானது. அது வருமாறு:-

நிரூபிக்க தவறிவிட்டது

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கலவரம் செய்த அல்லது பெஸ்ட் பேக்கரிக்கு தீவைத்த கும்பலை சேர்ந்தவர்கள் என நிரூபிக்கப்படவில்லை. இந்த குற்றச்செயல்கள் மிக மோசமானது என்றாலும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் தொடர்பை நிரூபிக்க அரசு தரப்பு பரிதாபகரமாக தவறிவிட்டது. பெஸ்ட் பேக்கரியில் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தவர்கள் காலையில் கீழே இறங்கி தடி மற்றும் வாள்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். ஆனால் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்களின் வாக்குமூலத்தில் அப்படி கூறவில்லை. சில முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன. காயமடைந்த மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் யாரும் குற்றம்சாட்ட 2 பேரும் தங்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக கூறவில்லை. எனவே சந்தேகத்தின் பலனின் அடிப்படையில் அவர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு கோர்ட்டு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com