அ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள்


அ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய நாள்
x

அண்ணன் ஆர்.எம்.வீரப்பனால் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறப்பட்டு, 1972 அக்டோபர் 1-ந்தேதி, லாயிட்ஸ் சாலை சத்யா திருமண மண்டபத்தில் சென்னை-செங்கை எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டம் நடைபெற்றது.

சைதை துரைசாமி,

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர்

தி.மு.க. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத 1953-ம் ஆண்டிலேயே கட்சியில் இணைந்தவர் எம்.ஜி.ஆர். சினிமா, அரசியல் எனும் இரட்டைக் குதிரையில் சவாரி செய்து தானும் வளர்ந்து கட்சியையும் வளர்த்து அண்ணாவை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தார்.

அண்ணாவின் மறைவிற்கு பிறகு, கருணாநிதி முதல்-அமைச்சரானதற்கும், 1971 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 184 இடங்களைப் பிடித்து, இமாலய வெற்றி பெறுவதற்கும், எம்.ஜி.ஆரே காரணமாக இருந்தார். இதற்கு அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியே கவிதை எழுதி நன்றி பாராட்டியுள்ளார். இதுவே அந்த கவிதை.

வென்றாரும் வெல்வாரும் இல்லாத வகையில், ஒளி வீசும் தலைவா! தென்னாடும் தென்னவரும் உள்ளவரை மன்னா உன் திருநாமம் துலங்க வேண்டும்! உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர் உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!

ஆனால், 1971 வெற்றிக்கு பிறகு அரசியலில் காட்சிகள் மாறின. முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து திரைப்படத்தில் நுழைக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். போலவே நடிக்க வைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். மன்றங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, பிள்ளையோ பிள்ளை மு.க.முத்து ரசிகர் மன்றத்துக்கு மட்டுமே கிளைக்கழகச் செயலாளர்கள் அனுமதி கொடுத்தனர்.

1972 தி.மு.க. ஊர்வலத்தில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக மு.க.முத்து தலைமை தாங்கினார். இவற்றைக் கண்டித்து, தாம்பரத்தில் பாலுவின் வீட்டில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு தனிக்கொடியும், தென்னக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். புகழ் பரப்பும் கலைக்குழுவுக்கு அனுமதியும் தலைவரிடம் கேட்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கொடி பற்றிய விவாதத்தில் தாமரைப்பூ சின்னத்தை நான் முன்மொழிந்தேன். அதற்குக் காரணம், இன்றைய அ.தி.மு.க. தலைமைக் கழகம் (அன்று சத்யா திருமண மண்டபம்) நுழைவாயில் கதவில் பொறிக்கப்பட்டிருந்த தாமரைப்பூ தலைவருக்கு ராசியானது என்று சொல்லப்பட்டது. இதை நான் சொன்னதும் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

அண்ணன் ஆர்.எம்.வீரப்பனால் எம்.ஜி.ஆரிடம் அனுமதி பெறப்பட்டு, 1972 அக்டோபர் 1-ந்தேதி, லாயிட்ஸ் சாலை சத்யா திருமண மண்டபத்தில் சென்னை-செங்கை எம்.ஜி.ஆர். மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நோக்கம் அறிந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, பாண்டிச்சேரி முதல்-மந்திரி பரூக் மரைக்காயர் மூலம், "இனி விமர்சனமில்லாத ஆட்சியும், ஜனநாயக முறையில் கட்சியும் நடத்துகிறேன்" என்று எம்.ஜி.ஆரிடம் உத்தரவாதம் கொடுக்கவே, எம்.ஜி.ஆரும் சமாதானம் ஆகிவிட்டார். இது எங்களுக்கு பின்னரே தெரியவந்தது.

கருணாநிதியுடன் சமாதானம் ஆகிவிட்ட எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் "தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று என்னைக் கேட்டால், தாய்க்கழகம்தான் வேண்டும் என்பேன். அண்ணா கண்ட இருவர்ணக் கொடிதான் நமது அடையாளம். தனித்த அடையாளம் தேவையில்லை" என்று எங்களது கோரிக்கைகளை நிராகரித்து பேசினார். கூட்டத்தில் மயான அமைதி நிலவியது. யாரும் தலைவரின் பேச்சிற்கு எந்தவிதமான எதிர்ப்பும், கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேடையில் இருந்த நான் உடனே கீழே இறங்கி, தலைவரின் காருக்கு அருகில் நின்றுகொண்டேன். காருக்கு வந்த எம்.ஜி.ஆரிடம் "வணக்கம்ணே. எம்.ஜி.ஆர். மன்றத்தை 'க்ளோஸ் பண்ணிட்டீங்க'. இனி ஒரு எம்.ஜி.ஆர். மன்றம் கூட உருவாகாத வகையில் உங்களது பேச்சு அமைந்துவிட்டது" என்று நான் சொன்னவுடன், ''என்ன?'' என்று கேட்டார்.

உடனே நான் "36 எம்.ஜி.ஆர். மன்றங்கள் அனுமதிக்காக வட்டச் செயலாளர்களிடம் சென்றபோது, அனுமதி கொடுக்காமல் பிள்ளையோ பிள்ளை மு.க.முத்து மன்றங்களை திறக்கச்சொல்லி மினிட் புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டபோது, மேலிடத்து உத்தரவு என்று வட்ட செயலாளர்கள் சொல்லுகிறார்கள்" எனவும், மேலும் கட்சியில் எம்.ஜி.ஆர். மன்றங்களுக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளைப் பற்றி சொன்னதும், 'நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கிளம்பினார்.

நான் சொன்ன தகவல்களை எம்.ஜி.ஆர். அன்றே விசாரித்ததில், மேலும் பல அதிர்ச்சி உண்மைகள் அவருக்கு தெரியவந்ததும், அன்றைய தினமே அக்டோபர் 8-ந்தேதி பகலில் திருக்கழுக்குன்றம் அண்ணா சிலை திறக்கவும், இரவு லாயிட்ஸ் காலனி பொதுக்கூட்டத்திற்கும் தேதி கொடுத்தார். அன்றைய கூட்டத்தில்தான், "கிளைக் கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்" என்று புரட்சிக் குரல் எழுப்பினார், பேசினார். மேலும், 'நான்தான் தி.மு.க., தி.மு.க.தான் நான்' என்றும் உரிமைக்குரல் எழுப்பினார்.

உடனடியாக தி.மு.க. செயற்குழு உறுப்பினர்களால், அக்டோபர் 10-ந்தேதி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டவுடன், இதுவரை தமிழகம் கண்டிராத மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அந்த மக்கள் புரட்சியால், மக்களுக்காக, மக்களால் அக்டோபர் 17-ந்தேதி உருவானதுதான் அ.தி.மு.க.

எண்ணிப்பார்க்கிறேன். அக்டோபர் 1-ந்தேதி, சமாதான மனநிலையில் பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஏமாற்றத்தில் மயான அமைதியில் விக்கித்து அமர்ந்திருந்தார்கள். அவர்களை போல் நானும் அமைதி காக்காமல், துணிச்சலாக நடந்த உண்மைகளை எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கவில்லை என்றால், 8-ந்தேதி கூட்டமோ, 10-ந்தேதி நீக்கமோ மற்றும் 17-ந்தேதி அ.தி.மு.க. கட்சி துவக்கமோ அந்த தருணத்தில் நிகழ்ந்திருக்காது.

அ.தி.மு.க. எனும் வலிமையான இயக்கம் தோன்றவும், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரியவும், அ.தி.மு.க.வுக்கு அடிக்கல் நாட்டிய இந்நாளில், இதற்கு காரணமான தாம்பரம் மற்றும் அக்டோபர் 1-ந்தேதி கூட்டங்களில் பங்குபெற்ற அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகளையும், எம்.ஜி.ஆரால் 'அ.தி.மு.க.வின் பகத்சிங்', 'அ.தி.மு.க.வின் முதல் தியாகி' என்று அழைக்கப்பட்ட சைதை துரைசாமியாகிய நான் வணங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறேன்.


Next Story