மழைக்காலத்தில் ஏ.சி.யை பயன்படுத்துவது எப்படி..? - தெரிந்து கொள்ளுங்கள்

நாள் முழுவதும் ஏ.சி.யை ஆன் செய்து வைக்காமல், உங்கள் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துங்கள்.
கோடை வெயில் படிப்படியாக குறைந்து அவ்வப்போது பல பகுதியில் மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மழைக்காலம் மனதிற்கு அமைதியைக் கொடுப்பதோடு, சுற்றுப்புறச் சூழலை இதமாக மற்றும் குளிர்ச்சியாக மாற்றுகிறது. அதே நேரம் மறுபுறம், இந்த சீசனில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் நம்முடைய வீடுகளுக்குள்ளும் ஈரப்பதம் நிலவுகிறது.
இது போன்ற சூழ்நிலையில், நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஏ.சி.யை பயன்படுத்தினால், கூல் மோடுக்கு (Cool Mode) பதிலாக டிரை மோடை பயன்படுத்துவது நல்லது. பெயருக்கு ஏற்றார் போல டிரை மோடானது காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் அறை வெப்பநிலையை பராமரிக்கிறது.
இது குறிப்பிட்ட அளவில் அறையை குளிர்விப்பதோடு மட்டுமல்லாமல், அங்கிருக்கும் அதிகபட்ச ஈரப்பதத்தையும் நீக்குகிறது. அதற்காக மழை சீசனில் ‘கூல் மோடு’-ஐ பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என சொல்லவில்லை. மழை சற்று குறைவாகவும், காற்றில் ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும் சூழலில் நீங்கள் உங்கள் ஏ.சி.யில் ‘கூல் மோடு’ பயன்படுத்தலாம்.
* வெப்பநிலை
மழைக்காலத்தில் ஏற்கனவே வெளியில் உள்ள காற்று குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் உங்கள் ஏ.சி.யின் வெப்பநிலையை மிக குறைவாக ‘செட்’ செய்ய வேண்டாம். அறை மிகவும் குளிர்ச்சி ஆனால் மழைக்காலத்தில் அது உங்களுக்கு தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்த கூடும். எனவே உங்கள் ஏ.சி.யின் வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வைத்து கொள்வது ஏற்றதாக இருக்கும்.
* சுத்தமான பில்டர்
அதேசமயம் ஏ.சி.யின் பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே இருங்கள். இந்த பழக்கம் மழைக்காலங்களில், ஏ.சி.யின் செயல்திறனை நன்றாக வைப்பதோடு மட்டுமல்லாமல், டிரை மோடில் அதிகளவிலான காற்றை வழங்கும். ஏ.சி. பில்டர் அசுத்தமாக இருந்தால், ஏ.சி.யிலிருந்து குறைந்த அளவிலான காற்று மட்டுமே வெளியேறும்.
* காற்று சுழற்சி
மழைக்காலங்களில் ஏ.சி.யை இயக்கும் போது குறிப்பிட்ட அறையில் காற்று சுழற்சியை பராமரிப்பது முக்கியம். எனவே அறையில் இருப்பதை தவிர புதிய காற்றை அறைக்குள் அனுமதிக்க சிறிது நேரம் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.
* ஆன்-ஆப்
நாள் முழுவதும் ஏ.சி.யை ஆன் செய்து வைக்காமல், உங்கள் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துங்கள். ஏ.சி. தேவை இல்லை என்று நீங்கள் நினைக்கும் போது சிறிது நேரம் அதனை ஆப் செய்து வைப்பது மின்சார செலவை மிச்சப்படுத்தி கொடுக்கும். மேற்கண்ட எளிய டிப்ஸ்களை கடைப்பிடிப்பதன் மூலம், மழைக்காலத்தில் கூட ஏ.சி.யை சரியாக பயன்படுத்தி உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.






