இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து; 2023ம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய ரெயில் விபத்துக்கள் - ஒரு பார்வை


இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து; 2023ம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய ரெயில் விபத்துக்கள் - ஒரு பார்வை
x
தினத்தந்தி 23 Dec 2023 8:28 AM GMT (Updated: 23 Dec 2023 8:32 AM GMT)

2023ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய ரெயில் விபத்துக்கள் குறித்த விவரங்களை காண்போம்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில்:

மேற்குவங்காளத்தின் ஷாலிமார் நகரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்:-

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காள மாநிலம் ஹவுராவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

மாநிலங்களை கடந்து பயணம்:-

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்குவங்காளத்தில் இருந்து ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழ்நாட்டின் சென்னைக்கு வருகிறது. பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மேற்குவங்காளத்தில் இருந்து புறப்பட்டு ஒடிசா உள்ளிட்ட மாநிலம் வழியாக கர்நாடகா வந்தடைகிறது.

கோரமண்டல் ரெயில் விபத்து:-

கடந்த ஜூன் 2ம் தேதி மேற்குவங்காளத்தின் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது.

ஷாலிமார் - சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

அப்போது, அந்த பகுதியில் ரெயில் நிலையத்திற்கு அருகே உள்ள கிளை வழித்தட தண்டவாளத்தில் சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் முக்கிய வழித்தடம், சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்த கிளை வழித்தட தண்டவாளத்தில் இருந்து மாற்றப்படவில்லை.

இதை கவனிக்காத ரெயில்வே ஊழியர்கள் பகனாகா பஜார் ரெயில் நிலையத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட சிக்னல் கொடுத்தனர். இதையடுத்து, சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிளை தண்டவாளத்தில் ஷாலிமார் - சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தவறுதலாக சென்றுள்ளது.

தவறான தண்டவாளத்தில் 127 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், கோரமண்டல் ரெயிலின் 3 பெட்டிகள் அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக வந்தது.

இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மின்னல் வேகத்தில் மோதியது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.

இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் 2 பயணிகள் ரெயில், 1 சரக்கு ரெயில் என மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின.

296 பேர் பலி;-

இந்த கோர விபத்தில் மொத்தம் 296 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

மனித தவறே காரணம்:

கிளை தண்டவாளத்தில் சரக்கு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்லும் முக்கிய வழித்தடத்திற்கு தண்டவாளத்தை மாற்றாமல் ரெயில்வே ஊழியர்கள் சிக்னல் கொடுத்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று அரசு தெரிவித்துள்ளது. மனித தவறே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்து:-

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தே இந்த ஆண்டின் மிகப்பெரிய ரெயில் விபத்தாக உள்ளது.

பிற ரெயில் விபத்துக்கள்:-

லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில்:-

சென்னையில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஜூன் 22ம் தேதி மாலை சென்னை அருகே வியாசர்பாடியில் உள்ள ரெயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ரெயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென ரெயில் பெட்டிகள் முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ரெயிலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதேவேளை, இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சென்னை புறநகர் ரெயில் தடம் புரண்டது...!

சென்னையில் பல்வேறு புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, கடந்த ஜூன் 11ம் தேதி காலை பேசன் பிரிட்ஜ் அருகே புறநகர் ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தின்போது ரெயிலில் யாரும் பயணிக்கவில்லை. இதன் காரணமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டது...!

விஜயவாடா - சென்னை சென்டிரல் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த ஜூன் 9ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பேசன் பிரிட்ஜ் அருகே தடம்புரண்டது. இந்த விபத்தின்போது ரெயிலில் யாரும் பயணிக்கவில்லை. இதன் காரணமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

நீலகிரி மலைரெயில் தடம்புரண்டது...!

ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையேயான நீலகிரி மலைரெயில் கடந்த ஜூன் 8ம் தேதி மாலை 3 மணியளவில் தடம்புரண்டது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுகொண்டிருந்த ரெயில் குன்னூர் ரெயில்நிலையம் அருகே தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்து;-

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மேற்குவங்காள மாநிலம் ஹவுரா இடையே பலக்னுமா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த ஜூலை 7ம் தேதி செகந்திராபாத்தில் இருந்து ஹவுராவுக்கு ரெயில் சென்றுகொண்டிருந்தது. பொம்மைபள்ளி - பகிடிபள்ளி இடையே சென்றுகொண்டிருந்தபோது ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடன் லோகோ பைலட் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து ரெயிலில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். இதனால், விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லக்னோ - ராமேஸ்வரம் பாரத் கவுரவ் ரெயில் தீ விபத்து:-

உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த 63 பேர் பாரத் கவுரவ் ரெயில் எனப்படும் பார்ட்டி கோச் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு செய்து கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ராமேஸ்வரம் சென்றனர். அங்கு ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

நாகர்கோவிலில் இருந்து புனலூர் - மதுரை விரைவு ரெயிலில் இணைக்கப்பட்ட பாரத் கவுரவ் ரெயில் பெட்டிகள் ஆகஸ்ட் 17ம் தேதி 3 மணியளவில் மதுரை வந்தடைந்தன. இந்த ரெயில் பெட்டிகள் அனந்தபுரி விரைவு ரெயில் இணைக்கப்பட்டு ஆகஸ்ட் 18ம் தேதி சென்னை செல்லவிருந்தது.

மதுரை ரெயில்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டிகளில் ஆகஸ்ட் 17ம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். ரெயிலில் வைத்து சமையல் செய்ய சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கியாஸ் சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என்பது ரெயில்வே விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரா ரெயில் தடம்புரண்டது...!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷகூர் பாஸ்தி ரெயில் நிலையத்தில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி இரவு புறநகர் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் ரெயில் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

பீகார் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து;-

பீகாரின் ஆனந்த் விகார் நகர் - கமஹ்யா ஜங்ஜன் இடையேயான வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு தடம்புரண்டது. பீகாரின் புஹக்சர் மாவட்டம் ரகுநாத்பூர் பகுதியில் ரெயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 70 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திரா ரெயில் விபத்து:-

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் - பலசா இடையேயான பயணிகள் ரெயிலும், விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரெயிலும் மோதி விபத்துக்குள்ளானது. கடந்த அக்டோபர் 29ம் தேதி ஆந்திராவின் கண்டங்பள்ளி அருகே இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ரெயில்களில் ஒன்று சிக்னலை மீறி சென்றதே இந்த கோர விபத்துக்கு காரணம் என ரெயில்வே நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த முக்கிய ரெயில் விபத்துக்கள் ஆகும்.


Next Story