தேசிய கல்வி தினம் 2023.. வரலாறு மற்றும் முக்கியத்துவம்


தேசிய கல்வி தினம் 2023.. வரலாறு மற்றும் முக்கியத்துவம்
x

மவுலானா அபுல் கலாம் ஆசாத்

தினத்தந்தி 11 Nov 2023 6:49 AM GMT (Updated: 11 Nov 2023 7:28 AM GMT)

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரியான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

மனிதர்களின் அடிப்படை உரிமை கல்வி. சமூகத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதற்கும், கல்வியை முன்னுரிமையாக அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றுவதற்கு நாம் எவ்வாறு செயல்படலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரியான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. இவர், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல், 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி வரை கல்வி மந்திரியாக பணியாற்றினார்.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக அறிவித்தது. அன்று முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

கல்வி நிறுவனங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரப்படுகின்றன. கல்வியை சிறந்ததாகவும் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் மாற்றுவதற்கான அவரது பணி பாராட்டப்பட்டு மதிக்கப்படுகிறது.

இந்த நாளில் கல்வி நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்கங்கள், கட்டுரைப் போட்டிகள், கல்வி சார் நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், ஊர்வலங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதன் மூலம் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சிறந்த அறிஞராகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தூணாகவும் திகழ்ந்தவர் மவுலானா ஆசாத் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கல்விக்கான அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது, நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவரது முயற்சிகள் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன என்றும் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story