சண்டே ஸ்பெஷல்: கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றி பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
கருவாடு - 5 துண்டுகள்
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பெரியது)
பூண்டு - ஒரு கைப்பிடி அளவு (உறித்தது)
புளி - எலுமிச்சை அளவு (ஊறவைத்தது)
தேங்காய் - 2 சில்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - கால் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கருவாட்டு துண்டுகளை கொதிக்கும் தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை பற்றவைக்கவும். எண்ணெய் நன்கு சூடாகியதும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொறிய விடவும். அத்துடன் கருவேப்பிலையையும் சேர்க்கவும். அத்துடன் தோல் நீக்கிய பூண்டு பற்களை சேர்க்கவும்.
அதன்பிறகு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். கண்ணாடி மாதிரி வெங்காயம் வந்தவுடன், வெட்டிவைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
அடுப்பில் தீயை குறைத்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அரை மணி நேரம் ஊறவைத்த புளி கரைசலை வடிகட்டி சேர்க்கவும். ஒரு கொதி வரும்வரை காத்திருக்கவும். எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கும். அதன்பிறகு தேங்காயை அரைத்து ஊற்றவும் (அல்லது தேங்காய் பாலும் சேர்க்கலாம்). 10 நிமிடங்கள் கழித்து சுத்தப்படுத்திவைத்த கருவாட்டு துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். கருவாட்டில் உப்பு இருப்பதால், தேவை என்றால் மட்டும் சேர்க்கவும். கிராமத்து வாசனையில் சுவையான கருவாட்டுக் குழம்பு ரெடி






