நிறம் மாறும் நிலா


நிறம் மாறும் நிலா
x

பொதுவாக ஒரே மாதத்தில் வரும் இரு பவுர்ணமிகளை நீல நிலா என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

நிலவை பற்றி பாடாத கவிஞர்களும் இல்லை. காதலியுடன் ஒப்பிடாத காதலனும் இல்லை. அந்த அளவுக்கு நிலா எப்போதுமே வசீகரமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ''நீல நிலா'', ''இளஞ்சிவப்பு நிலா'', ''மஞ்சள் நிலா'', என்று பல வண்ணங்களில் நிலவு தோன்றுவது பற்றிய செய்தியை பார்த்திருப்போம், படித்திருப்போம். உண்மையில் நிலா பல வண்ணங்களில் தோன்றுமா? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது? என்பது சுவாரசியமானது. அதை இக்கட்டுரையில் காண்போம்.

நீல நிலா

பொதுவாக ஒரே மாதத்தில் வரும் இரு பவுர்ணமிகளை (முழு நிலவு) நீல நிலா என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அதன்படி கடந்த ஆகஸ்டு 1 மற்றும் 30-ந்தேதிகளில் பவுர்ணமி வந்தது. மீண்டும் 2037-ம் ஆண்டு தான் ஒரே மாதத்தில் இரு பவுர்ணமி வர இருக்கிறது. ஆனால் உண்மையில் நிலா நீல நிறத்தில் தெரியுமா? என்றால், ஆம், தெரியும்...தெரிந்திருக்கிறது... ஒரு மாதம், இரு மாதங்கள் அல்ல, தொடர்ந்து 2 ஆண்டுகள் நிலா நீல நிறத்தில் தெரிந்து இருக்கிறது. 1883-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கிரகடாவ் எரிமலை வெடித்த போது எழுந்த சாம்பல் புகையின் காரணமாக அந்தபகுதியில் நிலா நீல நிறத்தில் தெரிந்ததை மக்கள் பார்த்துள்ளனர். எரிமலை வெடிப்பு மற்றும் காட்டுத்தீயினால் எழும் சாம்பல் புகையால் நிலா நீல நிறத்தில் தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இளஞ்சிவப்பு நிலா

பூமி சூரியனை சுற்றி வருவதைப் போல, நிலவும் தன் சுற்றுவட்டப்பாதையில் பூமியை சுற்றிவருகிறது. நிலவுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் 3,84,000 கிலோ மீட்டர் ஆகும். வருடத்திற்கு ஒருமுறை நிலா பூமிக்கு அருகில் வரும் நிகழ்வை பெரிஜி என்பர். அப்போது, நிலவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,63,000 கிலோ மீட்டர் ஆகும். சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் குறைவதினால் எப்போதும் வரும் பவுர்ணமியை விட ஏப்ரல் மாதம் தெரியும் சித்ரா பவுர்ணமி நிலா 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் பிரகாசமாகவும் இருக்கும். இந்த நிலாவை ''இளஞ்சிவப்பு நிலா'' (பிங்க் நிலா) என்று அழைக்கின்றனர். இந்தப் பெயரை வைத்து நிலா பிங்க் நிறத்தில் இருக்கும் என்று எண்ணி ஏமாறவேண்டாம். இந்த பெயர் வந்ததற்கு மற்றொரு காரணம் உண்டு. அமெரிக்காவில் வசந்த காலத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் பூக்கள் முதல் முதலில் பூக்கத் தொடங்கும் காலம் என்பதால் அமெரிக்க பழங்குடியினர் அப்படி அழைக்கின்றனர்.

ரத்த சிவப்பு நிலா

முழு சந்திர கிரகணத்தின் போது பூமி நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே வருகின்றது. பூமியின் நிழல் நிலவின் முழு அல்லது ஒரு பகுதியை மறைக்கும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது பவுர்ணமியின் போது மட்டுமே நடக்கும். சந்திர கிரகணத்தின் போது, பூமி நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது, இதன் மூலம் நிலவில் விழக்கூடிய அனைத்து ஒளியையும் பூமி கட்டுப்படுத்துவதோடு, நிலவின் மேற்பரப்பில் பூமியின் நிழலும் மறைக்கிறது. சந்திர கிரகணம் முடிந்த பின்பு மீண்டும் நிலவில் சூரிய ஒளிபட்டு, நிலா பிரதிபலிக்கும் போது பூமியில் உள்ள வளி மண்டலத்தில் அதிக துகள்கள் இருப்பதினால் சூரிய வெளிச்சத்தை அது சிதறடித்துவிடும். அப்போது நிலவின் ஒளி காற்றின் மூலக்கூறுவை தாண்டி வருவதால் நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தென்படுகிறது. ரத்த சிவப்பு நிலா (பிளட் மூன்) என்பது முழு சந்திர கிரகணத்தின் போது மட்டுமே ஏற்படுகின்றது.

மஞ்சள் நிலா

நிலா மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்ற பூமியின் வளிமண்டலம் காரணமாகும். வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளி சிதறலின் காரணமாக நிலா மஞ்சள் நிறத்தில் சில சமயங்களில் தோன்றுகிறது. நிலா அடிவானத்திற்கு அருகில் இருக்கும் போதும், நேரடியாக மேல்நோக்கி இருக்கும் போதும் நிலவின் வெளிச்சம் அதிக தூரம் வளிமண்டலத்தை கடந்து செல்ல வேண்டும். நிலவொளி நமது கண்களை அடையும் நேரத்தில், நீலம், பச்சை மற்றும் ஊதா நிற ஒளிக் கற்றைகள் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகின்றன. அதனால் தான் நாம் மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தை மட்டுமே பார்க்கின்றோம்.

நிலவின் நிறம் பூமியில் உள்ள இரவைப் பொறுத்தே மாறுபடுகிறது. சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பிரகாசிக்கும் நிலவின் உண்மையான நிறம் பழுப்பு மற்றும் சாம்பல் நிறமே ஆகும். நிலவு பல வண்ண நிலவாக தோன்ற பூமியில் உள்ள மாசுக்களே காரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

வான் இயற்பியலாளர் சொல்வது என்ன?

நிலா நிறம் மாறுவதை பற்றி புதுவை வான்இயற்பியலாளர் பாலமுருகன் கூறுகையில், 'பூமியிலுள்ள வளிமண்டலத்தில் ஒழுங்கற்ற அடுக்குகள், காற்றில் உள்ள சிறு மூலக்கூறுகள், வளிமண்டலத்திலுள்ள மற்ற பொருட்களான தூசி, நீர் துளிகள், காற்று மாசு, காட்டுத்தீ, எரிமலை வெடிப்பினால் எழும் சாம்பல் போன்றவை காரணமாக பூமியிலிருந்து பார்க்கும் போது நிலா பல்வேறு நிறங்களில் தோன்றுகிறது. ஒரே மாதத்தில் வரும் இரு பவுர்ணமிகளையும், அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வுகளையும் தான் ஆங்கிலத்தில் ''ஒன்ஸ் இன் ஏ புளூ மூன்'' என்று அழைப்பார்கள். ஆனால், நீல நிலவு அன்று நிலா நீல நிறத்தில் தெரிவது இல்லை என்பதே உண்மை' என்றார்.


Next Story