கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்துக்கு வயது 36


கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்துக்கு வயது 36
x

பாம்பன் பாலம் தனது சாலை போக்குவரத்தை தொடங்கி அக்டோபர் 2-ந் தேதியான இன்றுடன் (திங்கட்கிழமை) 35 ஆண்டுகளை கடந்து 36-வது ஆண்டை தொடங்குகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் கடல் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள ரோடு பாலத்திற்கும் முக்கிய பங்கு உள்ளன. பாம்பன் ரோடு பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 1973-ம் ஆண்டு சுமார் 20 கோடி நிதியில் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த ரோடு பாலத்தின் பணிகள் 1988-ம் ஆண்டு முடிவடைந்தது. அக்டோபர் 2-ந் தேதி பாம்பன் ரோடு பாலத்தை அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். இதையடுத்து பாம்பன் ரோடு பாலத்தில் சாலை போக்குவரத்து தொடங்கப்பட்டது.

36 வயது

கடலுக்குள் 79 தூண்களை கொண்டு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி ஸ்ப்ரிங் பேரிங் இணைப்புகளால் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பாம்பன் ரோடு பாலம் வழியாக ஏராளமான வாகனங்கள் ராமேசுவரம் வந்து செல்கின்றன. ஆசியாவிலேயே கடலுக்குள் அமைந்துள்ள மிக நீளமான சாலை பாலங்களில் பாம்பன் ரோடு பாலமும் ஒன்றாகும்.

கடலுக்குள் அமைந்துள்ள இந்த ரோடு சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் இறங்கி பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த பாலம் தனது சாலை போக்குவரத்தை தொடங்கி அக்டோபர் 2-ந் தேதியான இன்றுடன் (திங்கட்கிழமை) 35 ஆண்டுகளை கடந்து 36-வது ஆண்டை தொடங்குகிறது.

வர்ணம் பூசும் பணி

தற்போது பாம்பன் ரோடு பாலத்தை ரூ.16 கோடியில் சீரமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் ஊதா நிறத்தில் காட்சி அளித்து வந்த பாம்பன் ரோடு பாலம் தற்போது மூன்று விதமான வர்ணங்கள் பூசப்பட்டு காட்சியளித்து வருகின்றன. அதாவது தடுப்பு சுவரில் மஞ்சள் நிறமும், தூண்களில் ஊதா நிறமும், தூணுக்கும்-பாலத்திற்கும் இடைப்பட்ட அடிப்பகுதியில் சிகப்பு நிற வர்ணம் என 3 வர்ணங்கள் பூசப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த சீரமைப்பு மற்றும் வர்ணம் பூசும் பணிகளும் முடிவடைய உள்ளதாக கூறப்படுகின்றது.


Next Story