வானதி சீனிவாசன் பிரதமர் மோடி காலில் விழுந்தது எம்.பி. சீட் கேட்கவா? - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்


வானதி சீனிவாசன் பிரதமர் மோடி காலில் விழுந்தது எம்.பி. சீட் கேட்கவா?  - பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
x

அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.

கேள்வி: வானதி சீனிவாசன் பிரதமர் மோடி காலில் விழுந்தது எம்.பி. சீட் கேட்கவா? (டி.மாதவராஜ், கோவை)

பதில்: பிரதமர் நரேந்திரமோடி உடனடியாக அதை கோபத்துடன் கண்டித்து விட்டாரே... அரசியலில் காலில் விழும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

கேள்வி: அப்போதைய சென்னைக்கும், தற்போதைய சென்னைக்கும் என்ன வித்தியாசம்? (ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்)

பதில்: அப்போதைய சென்னை நகரமாக இருந்தது. இப்போதைய சென்னை பெரு நகரமாகி விட்டது.

கேள்வி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு சரியானதா? (டி.சத்தியநாராயணன், சென்னை)

பதில்: நல்ல தேர்வுதான். சந்தேகமே இல்லை. தமிழகத்தில் இருந்து அஸ்வின் இடம்பெற்றிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் ஆண்களா? பெண்களா? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)

பதில்: பொதுப்படையாக கூற முடியாது. தனிப்பட்ட நபரை பொறுத்தது.

கேள்வி: வீட்டுக்கு ஒரு பெண் 'கண்ணகி' மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? (குலசை நஜ்முதீன், மாம்பாக்கம்)

பதில்: கோவலன்கள் மாதவிகளை நாடாமல் இருந்தால் கண்ணகிக்கு வேலை இல்லை. அவள் நீதி கேட்டு போராட வேண்டிய நிகழ்வே நேர்ந்து இருக்காது.

கேள்வி: மனிதன் மகாத்மாவாக மாறாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதே மனிதன், மனிதனாக கூட வாழமுடியாமல் வாழ்கிறானே... (என்.ராஜேந்திரன், மேல்புவனகிரி)

பதில்: மகாத்மாவாக வாழ முடியாது. ஆனால் முயற்சித்தால் மனிதனாக வாழ முடியும்.

கேள்வி: உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)

பதில்: மற்றவர்கள் வாழ்வதற்காக செய்த சிறந்த தானத்துக்கு அரசு மரியாதை அளிப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பாகும்.

கேள்வி: நான் புலி. பூனை சண்டைக்கு கூப்பிட்டால் புலி போகுமா? என சீமான் கேட்கிறாரே? (சா.சொக்கலிங்கம், ரோஸ்மியாபுரம்)

பதில்: புலி பசித்தாலும் புல்லை தின்னாதே... பூனையுடனா சண்டைக்கு போகும்.

கேள்வி: வாழ்க்கையில் முன்னேற்றம் காண ஒரு வழி கூறுங்கள்? (த.நேரு, வெண்கரும்பூர்)

பதில்: உழைப்பு, நேர்மை, வேலை செய்யும் இடத்தில் உண்மை. இது மூன்றும் போதும்.

கேள்வி: உழைக்காமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? (மு.நடராஜன், திருப்பூர்)

பதில்: அது திரைப்படங்களில் ஒரே பாட்டில் நிகழ்ந்துவிடும். வாழ்க்கையில் நடக்காது.

கேள்வி: காங்கிரஸ் கட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த். பா.ஜ.க.வில் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. என்ன வித்தியாசம்? (பா.ஜெயப்பிரகாஷ், தேனி)

பதில்: கதருக்கும், காவிக்கும் உள்ள வேறுபாடு தான்.

கேள்வி: சீமானை எதிர்த்த நடிகை விஜயலட்சுமி திடீரென வாபஸ் வாங்கிவிட்டாரே? (பிரணவம், கான்சாபுரம்)

பதில்: வேறு என்ன செய்வார்? சூறாவளி முன் எதிர்த்தா நிற்கமுடியும்?

கேள்வி: சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததற்கு நடிகை ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடியது குறித்து... (செந்தில்குமார், நெசப்பாக்கம், சென்னை)

பதில்: சந்திரபாபு நாயுடு, ரோஜாவுக்கு எதிர்க்கட்சி தலைவர். அவர் கைது செய்யப்பட்டால், பட்டாசு வெடிக்காமல் கருப்பு பட்டை அணிவார் என்றா எதிர்பார்க்கிறீர்கள்?

கேள்வி: சமீபகாலமாகவே திருமணம் செய்துகொண்ட ஆண், பெண் இருவரும் குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்து, ஏற்கனவே குழந்தையுள்ள வாழ்க்கைத்துணையை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருகிறதே? (டி.கே.மோகன், பாளையங்கோட்டை)

பதில்: 'உன் குழந்தையும், என் குழந்தையும், நம் குழந்தையுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருக்கிறார்கள்' என்று பெருமைப்பட்டு கொள்ளலாம்.

கேள்வி: இக்கால காதலர்கள் கவிதை மூலமாக காதலிப்பது இல்லையே... ஏன்? (அ.யாழினி பர்வதம், கே.கே.நகர், சென்னை)

பதில்: கவிதை எழுத தெரிந்தால் தானே கவிதை மூலமாக காதலிக்கலாம். இப்போதைய காதல் குறுஞ்செய்தி போல குறுகிய காதல்.


Next Story