அகத்தியர் மருத்துவம் பார்த்த தோரணமலை


அகத்தியர் மருத்துவம் பார்த்த தோரணமலை
x

கார்த்திகேயன் குடிகொண்டிருக்கும் இறையருள் நிறைந்த ஓர் இடம்தான் தோரணமலை.

தான் விரும்பிய ஞானப்பழம் தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் பழனி மலை சென்று ஆண்டியின் கோலமுற்று நின்ற தனது புதல்வன் முருகனை சமாதானப்படுத்திய பார்வதி தேவியார், "குமரா!... நீ கோபத்துடன் இங்கு வந்து நின்றதால், இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக குவலயத்தோர் வழிபடட்டும்" என்று வாழ்த்தி ஆசீர்வதித்தார். அன்னையின் அருள்வாக்கு அழகன் முருகனுக்கு அமுதவாக்காக அமைந்ததோடு, அப்படியே பலித்தது.

ஆம்...தமிழகத்தில் இன்று, குன்றுகள் இருக்கும் இடமெல்லாம் அந்த வேலவன் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றான், பழனி, சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், சோலைமலை (பழமுதிர்ச்சோலை), மருதமலை, ஓதிமலை என்று முருகப்பெருமானின் திருத்தலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படி அந்த கார்த்திகேயன் குடிகொண்டிருக்கும் இறையருள் நிறைந்த ஓர் இடம்தான் தோரணமலை. சித்தர்கள் வாழ்ந்த இந்த மலை உலகிலேயே முதன் முதலாக கபால அறுவை சிகிச்சை நடந்த இடமாகவும் கருதப்படுகிறது.

வாருங்கள்... மயில் வாகனனை தரிசிக்க, குற்றால சாரல் வீசும் தோரணமலைக்கு சென்று வருவோம்...

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ளது இயற்கை எழில் சூழ்ந்த தோரணமலை. வடக்கே குஜராத் மாநிலத்தில் தப்தி நதி அருகே உருவாகி இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி வரை 1,600 கி.மீ. தூரம் நீண்டு கிடக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு சிறிய பகுதிதான் இந்த தோரணமலை. குறுமுனி அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலையின் ஓர் அங்கமாக இது விளங்குகிறது.

தென்காசி-கடையம் சாலையில் தென்காசியில் இருந்து தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவிலும், கடையத்தில் இருந்து வடமேற்கே 9 கி.மீ. தொலைவிலும் இந்த மலை அமைந்துள்ளது. இந்த சாலையில் தோரணமலை விலக்கு என்ற இடத்தில் மலைக்கு செல்லும் பாதை பிரிகிறது. அங்கு பக்தர்களை வரவேற்கும் விதமாக பெரிய தோரண வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்து மேற்கு நோக்கி சென்றால் மலை அடிவாரத்தை அடைந்து விடலாம். பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் போதே முகம் தழுவிச்செல்லும் குளிர்ச்சியான பொதிகை தென்றல் நம்மை வரவேற்கும். அடிவாரம் வரை வாகனங்கள் செல்ல சாலை வசதி உள்ளது. அடிவாரத்தில் வல்லப விநாயகர், பால முருகன், குரு பகவான், நவக்கிரகங்கள், சப்த கன்னியர், கன்னிமாரியம்மன் சன்னதிகள் உள்ளன. அவர்களை தரிசித்துவிட்டு அங்கிருந்து படி ஏற வேண்டும். 1,193 படிகள் ஏறிச் சென்றால் மலை உச்சியில் இருக்கும் முருகன் கோவிலை அடையலாம்.

கரடு முரடாக இருந்த பாறைகளை வெட்டி சீரமைத்து அழகாக படிகள் அமைத்து இருக்கிறார்கள். படிகள் விசாலமாக இருப்பதால் மலை ஏறுவதில் அதிக சிரமம் இருக்காது. வழியெங்கும் நிறைந்திருக்கும் அபூர்வ மூலிகைகளை கடந்து வரும் காற்றை சுவாசித்தபடி மலை ஏறுவது சுகமான அனுபவமாக இருக்கும்.

மலையின் உச்சிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு குகைக் கோவிலில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் அருகே வற்றாத சுனை ஒன்று உள்ளது. இது தவிர மேலும் சில சுனைகளும் மலையில் உள்ளன. சுனைகளில் உள்ள நீர் மருத்துவ குணம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

முருகன் கோவிலுக்கு சற்று தள்ளி சிறிய பத்திரகாளியம்மன் கோவில் ஒன்றும் உள்ளது. மயில்வாகனனை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த அம்மனையும் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள்.

மலையில் உள்ள பாறைகளில் ஆங்காங்கே குழிகள் உள்ளன. சித்தர்கள் மருந்து அரைப்பதற்காக பயன்படுத்திய குழிகள் அவை என்று சொல்கிறார்கள்.

மற்றொரு இடத்தில் பாறையில் பாதம் போன்ற பள்ளமான வடிவம் உள்ளது. அதை முருகப்பெருமானின் பாதம் என்கிறார்கள். அந்த இடத்தில் பக்தர்கள் காசுகளை போட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுகிறார்கள்.

சித்தர்கள், முனிவர்கள் வாழ்ந்த இந்த தோரணமலை முன்னொரு காலத்தில் தமிழ் மருத்துவ பாடசாலையாக விளங்கியதாகவும், உலகிலேயே முதல் கபால அறுவை சிகிக்சை இங்குதான் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு புராண வரலாறும் உள்ளது.

வடக்கே கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்ற போது தேவர்களெல்லாம் அங்கு கூடியதால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதனால் பூமியை சமன் செய்வதற்காக குறுமுனி அகத்தியரை தென்கோடியில் உள்ள பொதிகை மலைக்கு சிவபெருமான் அனுப்பிவைத்தார். அவர் இங்கு வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது.

தென் தமிழகம் வந்த அகத்தியர் தமிழ்க்கடவுளான முருகப்பெருமானிடம் தமிழை கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதினார். பின்னர் தோரண மலைக்கு சென்று, உலக மக்கள் நோயின்றி வாழ உதவும் வகையில் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கு தனது சீடர்களுக்கு மருத்துவ ஆராய்ச்சி பற்றிய பாடங்களையும் கற்றுக்கொடுத்தார். பல்வேறு இடங்களிலும் இருந்து சித்தர்கள் வந்து இங்குள்ள பாடசாலையில் மருத்துவம் பயின்றார்கள்.

இந்த நிலையில் தீராத தலைவலியால் அவதிப்பட்ட காசிவர்மன் என்ற மன்னன், எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குணம் அடையாததால் அகத்தியரை தேடி தோரண மலை வந்தான். மன்னனை பரிசோதித்த அகத்தியர் அவன் தலைக்குள் சிறிய அளவிலான தேரை ஒன்று இருப்பதை கண்டு அறிந்தார். ஒரு நாசி துவாரத்தின் வழியாக தண்ணீரை உள்ளே இழுத்து மற்றொரு நாசி துவாரத்தின் வழியாக அதை வெளியேற்றும் பயிற்சியில் காசிவர்மன் ஈடுபடுவது உண்டு. அந்த பயிற்சியின் போது தண்ணீரில் இருந்த நுண்ணிய தேரை நாசி துவாரத்தின் வழியாக தலைப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அகத்தியர் காசிவர்மனுக்கு கபால அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தலைப்பகுதிக்குள் தேரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போதிலும் அதை வெளியே எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மீறி எடுத்தால் மன்னன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை உண்டானது. அப்போது, அறுவை சிகிச்சையின் போது உதவியாக இருந்த ராமதேவர் என்ற சீடர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து, அதை கையால் அலம்பிக்கொண்டே இருந்தார். தண்ணீர் அலம்பும் சத்தத்தை கேட்டதும் மன்னனின் மூளைப்பகுதியில் இருந்த தேரை துள்ளிக்குதித்து தண்ணீர் பாத்திரத்தில் விழுந்தது. இதனால் மன்னன் காசிவர்மனுக்கு கபால அறுவை சிகிக்சை சிக்கலின்றி வெற்றிகரமாக முடிந்தது.

தண்ணீரை கொண்டு வந்து அலம்பி சமயோசிதமாக செயல்பட்டு, தேரை வெளியேற காரணமாக இருந்த சீடர் ராமதேவரை அகத்தியர் பாராட்டினார். அதுமுதல் ராமதேவர் 'தேரையர்' என அழைக்கப்பட்டார்.

அகத்தியரும், தேரையரும் தோரண மலையில் இருந்த போது அங்குள்ள ஒரு குகையில் முருகப்பெருமானின் சிலையை வைத்து வணங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் அகத்தியர் தோரண மலையில் இருந்து கிளம்பிச் செல்ல, அவரது கட்டளையை ஏற்று தேரையர் அங்கேயே தங்கி மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். தனது முடிவு காலம் நெருங்கியதும், தேரையர் தோரண மலையிலேயே சமாதி நிலையை அடைந்தார். அவர் சமாதி நிலையை அடைந்த இடம், மலை ஏறும் பாதையில் 5-வது மண்டபத்துக்கு சற்று மேற்கே உள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கு சரியான பாதை இல்லை.

தேரையர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, முருகனுக்கு வழிபாடு நின்று போனதோடு, சிலையும் காணாமல் போனது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இது நடந்ததாக சொல்லப்படுகிறது.

காலச்சக்கரம் உருண்டோடிக்கொண்டிருந்த நிலையில் கடந்த 1930-ம் ஆண்டு ஒருநாள், திடீரென்று புதிய மாற்றத்துக்கான அறிகுறி தோன்றியது. தோரண மலையில் இருந்து கிழக்கே சற்று தொலைவில் உள்ள முத்துமாலைபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் கனவில் அன்று முருகப்பெருமான் தோன்றி மலையில் உள்ள ஒரு சுனையில் மறைந்து கிடக்கும் தனது சிலையை எடுத்து குகையில் நிறுவி வணங்கும்படி கூறினார்.

இதைத்தொடர்ந்து பெருமாள் ஊர்மக்கள் சிலருடன் தோரண மலைக்கு சென்று சுனையில் கிடந்த முருகப்பெருமானின் சிலையை வெளியே எடுத்தார். சிலையை அங்குள்ள குகையில் நிறுவி அவர் வழிபட்டு வந்தார். சித்தர்கள் வழிபட்ட சிலை என்பதால், தோரணமலை முருகனை வணங்கினால் எந்த தோஷமும் நெருங்காது என்பது ஐதீகம் ஆகும். இதனால் கடையம் சுற்று வட்டார மக்கள் தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.

பெருமாளின் மறைவுக்கு பிறகு 1965-ம் ஆண்டு அவரது பேரன் கே.ஆதிநாராயணன் கோவில் நிர்வாக பொறுப்புகளை ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரியரான அவர் வேலை நேரம் தவிர மற்ற நேரத்தை தோரணமலையிலேயே கழித்தார். அப்போதெல்லாம் கோவிலுக்கு செல்ல சரியான பாதை கிடையாது. கல்லும், முள்ளும் நிறைந்த குறுகலான பாதையில் பக்தர்கள் சிரமப்பட்டுத்தான் மேலே ஏறிச் செல்ல முடியும். பெண்களும், முதியவர்களும் செல்வது இயலாத காரியமாக இருந்தது.

இதனால் கோவிலுக்கு செல்ல படிகள் கட்டுவதற்கான முயற்சிகளை ஆதிநாராயணன் மேற்கொண்டார். அத்துடன், கடையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மட்டுமே தெரிந்திருந்த தோரணமலை முருகன் கோவிலை பிரபலப்படுத்த, சினிமா தியேட்டர்களில் 'சிலைடு'கள் போட ஏற்பாடு செய்தார். இதைத்தொடர்ந்து இங்கு அதிக அளவில் மக்கள் வரத் தொடங்கினார்கள். படப்பிடிப்புக்காக சினிமாக்காரர்களும் வர ஆரம்பித்தனர்.

உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களின் உதவியோடு மலையில் இருக்கும் குகைக்கோவில், மலையேறி செல்வதற்கான படிக்கட்டுகள், அடிவாரக்கோவில், சுனைகள் புனரமைப்பு ஆகிய பணிகளை இக்கோவிலின் பரம்பரை அறங்காவலரான ஆதிநாராயணன் செய்து முடித்துள்ளார்.

ஆதிநாராயணனுக்கு பிறகு அவரது மகன் செண்பகராமன் கோவில் பரம்பரை அறங்காவலர் பொறுப்பை ஏற்றபின் ஆன்மிகப்பணியோடு, அறப்பணிகளையும் செய்து வருகிறார்.

அடிவாரத்தில் இருந்து படியேறிச் சென்று குகைக்கோவிலை அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும். வழியில் பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல வசதியாக ஆங்காங்கே அகத்தியர், தேரையர், அருணகிரி நாதர், பாலன் தேவராயர், அவ்வையார், நக்கீரர் ஆகியோரின் பெயர்களில் 6 மண்டபங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இருட்டுவதற்குள் திரும்பி வருவது சிரமம் என்பதால், பிற்பகல் 3 மணிக்கு மேல் மலை ஏற அனுமதி கிடையாது.

குகைக்கோவிலில் தினமும் அதிகாலையில் 5.30 மணிக்கே பூஜை நடைபெறுகிறது. தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை இங்கு மிகவும் விசேஷம். அன்று அருகில் உள்ள கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இதனால் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

தினந்தோறும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது தவிர ஞாயிறு, கடைசி வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில் காலை சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.

மாதத்தோறும் பவுர்ணமியன்று காலை தோரணமலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.

ஆண்டுதோறும் தைப்பூச விழாவும், வைகாசி விசாகமும் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழாவின் போது பெண்கள் சீர்வரிசை எடுத்து வர முருகப்பெருமான்-வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

மறைந்த டைரக்டர் பரதனின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேசின் தாயார் மேனகா கதாநாயகியாக நடித்த 'சாவித்திரி' படத்தின் பல காட்சிகள் தோரணமலையில்தான் படமாக்கப்பட்டன.

'அச்சமில்லை அச்சமில்லை', 'பூவிலங்கு', 'குறும்புக்காரன்', 'பாசமுள்ள பாண்டியரே', 'ஆல்பம்', 'வேலுண்டு வினையில்லை' படங்களின் காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டு உள்ளன.

தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்காகவும் வருகிறார்கள். கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'மர்மதேசம்' தொடரின் படப்பிடிப்பு இங்கு பல நாட்கள் நடைபெற்றது.

'கண்ணான கண்ணே' தொடரின் படப்பிடிப்பும் இங்கு நடந்தது.

'தோரணமலை'யான 'வாரண மலை'

தென்காசி-கடையம் சாலையில் செல்லும் போது இந்த தோரண மலையின் அழகையும், கம்பீரத்தையும் கண்டு ரசிக்கலாம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு யானை படுத்திருப்பது போன்று இந்த மலை காட்சி அளிக்கும். யானைக்கு 'வாரணம்' என்ற மற்றொரு பெயர் உண்டு. எனவே 'வாரண மலை'தான் காலப்போக்கில் திரிந்து 'தோரண மலை' ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.

மற்றொரு பெயர்க் காரணமும் சொல்லப்படுகிறது. இந்த மலைக்கு தென் பகுதியில் ராமநதியும், வடக்கே ஜம்பு நதியும் ஓடுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்த இரு நதிகளும் கடையம் அருகே ஒன்றாக இணைகின்றன. இந்த நதிகள் மலைக்கு இருபுறமும் தோரணம் போல் அமைந்துள்ளதால், தோரணமலை என அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.


Next Story